தங்கத்தகரம்
“
என்னடி செல்வி நாழியோட வரப்பிடாதா? நேத்து ஒருநாள் நீ வரலன்னதும் எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு. பின்னாடி துணி போட்ருக்கேன். போய் வேலையைப் பாரு. ஐயா கிளம்பிண்டு இருக்கார்.” என்று சொல்லியவாறே வீட்டுக்குள் ஓடினாள் கமலம் மாமி. புடவை முந்தானையை இடுப்பில் சொருகியபடியே வீட்டின் பின்பக்கம் நோக்கி சென்றாள் செல்வி. அங்கே பின்வாசல் அருகே இருந்த திண்ணையில் அழுக்குத் துணிகள் கிடந்தன. அவற்றை எடுத்து அலுமினிய வாளியில் முக்கி, சலவைத்தூளையும் வேண்டிய அளவுக்கு கலந்து, நுரை பொங்க நின்ற வாளியில் எல்லாத் துணிகளும் நனைந்து விட்டனவா என்பதை உறுதி செய்து கொண்டபின், தண்ணீர் குழாயை அண்டிச் சென்றாள், அங்கிருந்த பாத்திரங்களை கழுவுவதற்கு.
செல்வி, பாத்திரங்களை கழுவி முடிப்பதற்கும், கமலம் மாமி அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. “என்னடி துணியை இன்னும் துவைக்கலயா?” என்று சற்று அதட்டலோடு கேட்டாள். “இல்லை மாமி.. துணியை ஊற வச்சுட்டுத்தான் பாத்திரம் தொலக்க உட்காந்தேன். இப்ப துவைக்கிறேன் மாமி” என்று அடக்கத்தோடு பதில் கூறிவிட்டு, அலுமினிய வாளியை எடுத்துக் கொண்டு, சலவைக்கல் அருகே சென்று தன் வேலையைத் தொடர ஆரம்பித்தாள் செல்வி. காலையில் குளித்துவிட்டு தலைமுடியோடு சேர்த்துக் கட்டிய துண்டை அவிழ்த்து, அதைக் கொண்டே ஈரமாயிருந்த தலையைத் துவட்ட ஆரம்பித்தாள் கமலம் மாமி. “நேத்து உன் மகன் காவல் நிலையத்துல இருக்கான்னு சொல்லிட்டு ஓடினியே, என்ன பிரச்சினை?”என்று அக்கறையோடு விசாரித்தாள் கமலம் மாமி.
அதுவரை திரண்டிருந்த மேகங்கள் எல்லாம் அவன் கண்களில் மழையைப் பொழிய “ அத்த ஏம்மா கேட்குறீங்க, உங்களுக்கு தான் தெரியுமே ஊர் பிரச்சினை எல்லாத்தையும் தன் தலையில போட்டுக்குவான். நேத்து ஒரு படி மேல போயி, பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் கடைய மூட சொல்லி அவன் ஆளுங்களோட போய் பிரச்சினை பண்ணிருக்கான். அதான் அவனை தூக்கி உள்ள வச்சிட்டாங்க. அப்புறம் தெரிஞ்சவங்கள வச்சி பேசி அவனை கூட்டியாந்தேன் மா. “உனக்கு ஏன்டா இந்த வேலை?” னு கேட்டா, நாம அடிமையா இருக்குறோன்றான், எதிர்த்து போராடணும்னு என்னென்னமோ சொல்றான்மா. எனக்கு ஒன்னும் புரியமாட்டுங்குது. காலையிலேயே மறுபடியும் வெளிய போயிட்டான். எனக்கோ அவன் தங்கச்சிக்கோ ஒரு குறையும் வைக்கிறதில்லம்மா. இங்க வேலைக்கு வர்றதா உங்க நல்ல மனசுக்காகத் தாம்மா” என்றவாறே புடவை முந்தானையை இழுத்து தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“இப்பல்லாம் நாலு எழுத்து அங்க இங்கன்னு படிச்சிண்டு ஆனா ஊனா போராட்டம்னு கிளம்பிடுறாள். இதுக்குதான் அன்னைக்கே சொன்னேன், உன் மகன் பத்து வரைக்கும் படிச்சது போதும் ஏதாவது கடையில சேத்துவிடு. கணவன் இல்லாத உனக்கும் பக்கத்துணையா இருக்கும்னு. நீதான் நான் சொன்னதை கேட்கல. கேட்டுருந்தா உன் பையன் உன் கைக்குள்ளேயே இருந்திருப்பான். சரி உன் பொண்ணையாவது சூதானமா கைக்குள்ள வைச்சிக்கப் பாரு. இப்ப பன்னிரண்டாவது படிக்கிறாள் இல்ல உன் பொண்ணு?” என்ற கேட்டுவிட்டு செல்வியின் பதிலைக் கூட எதிர்பாராமல். “ உன் பையன் நாட்டை திருத்துறேன், ஊரைத் திருத்துறேன்னு சொல்லி குடும்பத்த மறக்குறதுக்கு முன்னாடி, சட்டுபுட்டுனு உன் பொண்ணுக்கு கல்யாணத்தைப் பண்ணிடு. இப்பவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா உன் பொண்ணு பன்னிரண்டாவது முடிக்கிறதுக்குள்ள நல்ல வரனா அமையும். என்ன சரியா?” என்று சற்று உரிமையோடு அன்புக் கட்டளை இட்டாள் கமலம் மாமி.
மாமியின் அறிவுரைகளைக் கேட்டவாறே தன் வேலையை முடித்த செல்வி, மாமிக்குத்தான் தன் மேல் எத்தனை அக்கறை என்று பூரித்துப் போனாள். “ சரிம்மா வேலைலாம் முடிஞ்சிடுச்சி நான் கிளம்புறேன்” என்றவாறே தூக்கி சொருகிய புடவையை இறக்கிவிட்டு, முடியையும் சற்று சரிசெய்து கொண்டே மாமியிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் கல்விச்செல்வமும், பொருட்செல்வமும் அறியாமல், தன் மக்களையும், உழைப்பையும் மட்டுமே பெரும் செல்வமாக எண்ணுகின்ற செல்வி.
செல்விக்கு விடைகொடுத்து விட்டு கமலம் மாமி வீட்டுக்குள் நுழையவும், அவளது அலைப்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது. மறுமுனையில் அவள் மகள் காயத்ரி “அம்மா இங்க நீட் பரீட்சைப் பயிற்சிக்கு மாதம் 10000 சொல்றாங்கம்மா. என்ன பண்றது?” என்று சற்று சலிப்போடு கேட்டாள் காயத்ரி. “ அப்பா அந்த பயிற்சி மையத்தை பற்றி விசாரிச்சிட்டார். நீ அடுத்த வருடம் +2 முடிச்சிட்டு மருத்துவக் கல்லூரியில சேரணும். எவ்ளோ செலவானாலும் பரவால்ல அம்மா பாத்துப்பேன். நீ சமத்தா படிச்சா போதும். அப்பா கொடுத்த காசோலை இருக்கோன்னோ? அதுல அவா கேட்குற பணத்தை எழுதிக்கொடுத்துண்டு வா. சரியா? பாத்து பத்திரமா வா. அம்மா வச்சிடுறேன்” என்று தன் மகளை வெள்ளை உடுப்பில் மருத்துவராக மனதில் நின்னைத்தவாறே, அலைப்பேசி இணைப்பைத் துண்டித்தாள் கமலம் மாமி.
— அசுரன்
கருத்துகள்
கருத்துரையிடுக