பொறுமை

ஞாயிற்றுக்கிழமை மாலை காலாற கடற்கரையில் நடைபோட்டு, அலையின் ஓசையிலும் காற்றின் சீற்றத்திலும் தன்னை சிறிது நேரம் தொலைத்துவிட்டு, கடற்கரை மணலில் முளைத்திருக்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தன் இருசக்கர வாகனம் அருகே வந்தான் கதிர். வண்டியை கிளப்பி சாலையை நிரம்பிய மக்கள் கூட்டத்தை கவனத்தில் கொண்டு மெதுவாக வண்டியை செலுத்தி பிரதான சாலைக்கு வந்தான். அப்போதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென பறந்து சென்றன அந்த இரு சக்கர வாகனங்கள். அத்தனை போக்குவரத்து நெரிசலிலும் தனக்கென வண்டிகளின் ஊடே நுழைந்து மின்னலாய் பறந்தனர்.  சற்றே அதிர்ந்த கதிர் “கொஞ்சம் கூட பொறுமை இல்லாம எங்க போயி விழுந்து நொறுங்க இவ்வளவு வேகமா போறானுங்களோ” என மனதில் திட்டிக்கொண்டே பிரதான சாலையில் கலந்து தன் வீட்டை நோக்கி சென்றான்.
                   
                   வீட்டுக்கு செல்லும் வழியில், ஒரு போக்குவரத்து நெரிசலில் நிற்கையில் அவன் கண்ணில் பட்டது அந்த விளம்பரம். “Order செய்த அரைமணி நேரத்தில் பீஸ்ஸா விநியோகிக்கப்படும், இல்லையேல் பீஸ்ஸா இலவசம்” என்று மின்விளக்குகள் அந்த விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தன. கடையின் பெயரை மனதில் பதித்த கதிர், வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேளையாக அந்தக் கடையின் அலைபேசி எண்ணை இணையத்தில் தேடிப்பிடித்து ஒரு பீஸ்ஸாவை order செய்தான். பீஸ்ஸா சாப்பிட வேண்டும் என்ற ஆசையாலும் புதிய கடையின் தரத்தை சோதிக்கும் ஆவலும் அவனிடம் மேலோங்கி இருந்தது. பசியும் வயிற்றைக் கிள்ள ஆர்வமாய் வாசலைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான் கார்த்திக். 

               அரை மணிநேரக் காத்திருப்பிற்குப் பிறகு பொறுமையிழந்த கதிர், அந்தக் கடையின் மேலாளரை அழைத்து வசைமாரி பொழிந்துவிட்டான் கதிர். அடுத்த  அழைப்பு மணி கேட்டு வாசலுக்கு வந்தான் கதிர் சற்றே அதிர்ந்தான். அவன் முன்னே கையிலும் தலையிலும் சில சிராய்ப்புக் காயங்களுடன் கையில் பீஸ்ஸாவை ஏந்தியவாறே நின்றிருந்தான் அந்தக் கடையின் விநியோகப் பையன். “ஏன்பா என்னாச்சு? என்று பதட்டத்தோடு கதிர் கேட்க, “அது ஒன்னுமில்ல சார், சீக்கிரம் பீஸ்ஸாவை விநியோகம் பண்ணனும்னு வேகமா வரும்போது ஒரு சின்ன விபத்து. சின்ன சிராய்ப்பு தான் சரியாகிடும்” என்று தன் வேதனையை மறைத்துக்கொண்டு புன்முறுவலோடு பதிலளித்துவிட்டு, தன் இரு சக்கர வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அந்தப்பையன்.

                        அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் கதிர். தனது பசியினால் வந்த அவசரம் ஒரு மனிதனின் உயிருக்கே உலை வைக்கும் என்ற உண்மை புரிந்தவனாய் கலங்கி நின்றான் தன் பசியை மறந்து. அன்று முதல் சாலைப் பாதையில் மட்டுமல்ல தன் வாழ்க்கைப் பாதையிலும் பொறுமையைகடைபிடிக்க வேண்டும் என உறுதி பூண்டான்.

                                                           — அசுரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கத்தாலி

கலியுகக் கண்ணகி

அறிந்த கதை