மணியோசை

ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் இருந்த செல்வன் “தமிழாசிரியர் வந்துட்டாருடா எழுந்திரு” என்ற திலகனின் குரல் கேட்டு அனிச்சையாய் எழுந்து வழக்கமான வணக்கத்தை செலுத்திவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான். அந்தப் பாடவேளை முடியும் வரை அவனது கவனம் சிதறியவாறே ஏதோ யோசனையில் இருந்தான். அதைத் திலகனும் கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பாடவேளை முடிந்து உணவு இடைவேளைக்காக அனைவரும் சென்ற பிறகும் அதே சிந்தனையில் இருந்தான் செல்வன்.  திலகனும் “ஏன்டா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று செல்வனின் தோள்மேல் கைபோட்டு அக்கறையுடன் கேட்டான். “இன்னைக்கு மாறன் வாத்தியார் இயற்பியல் பாடம் நடத்தும்போது ஒன்று சொன்னாரே டா கவனிச்சியா?” என்று சோகம் கலந்த ஆவலில் கேட்டான் செல்வன். “ஆமாண்டா நான் கூட செய்தியில் பார்த்தேன், ஒரே ஏவுகணையில் 100 செயற்கைக்கோள் அனுப்பிருக்காங்களாம் நம் நாட்டில் இருந்து” என்று வியப்போடு பதிலளித்தான் திலகன். “கொஞ்ச நாளைக்கு முன்னாடி, செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பினாங்கன்னு செய்தியில் பார்த்தேன் டா” என்று அப்பாவியாய் சொன்னான் செல்வன். “சரிடா அதுக்கு நீ ஏன் ஒரேமாதிரியா இருக்க?”என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டான் திலகன்.

                      “ உனக்குதான் தெரியுமே எங்க அப்பா சாக்கடையில அடைப்பு எடுக்குற வேலை பார்க்கிறார்னு” என்று செல்வன் சொல்லி முடிப்பதற்குள், “ஆமாம் அதுக்கென்னடா இப்போ?” என்று பொறுமையிழந்து கேட்டான் திலகன். “நேத்து அடையாறுல இருக்கிற ஒரு உணவகத்துல அடைப்பு எடுக்கிறதுக்காக போனார்டா. அங்க ஏதோ விசவாயு தாக்கிடுச்சாம். மூச்சுபேச்சில்லாம மருத்துவமனையில இருக்காருடா. வானத்துக்கு அனுப்ப ஏவுகணை செய்யது தெரிஞ்ச அரசாங்கத்துக்கு எங்க அப்பா மாதிரி ஆளுங்களை இந்த மாதிரி ஆபத்தில் இருந்து காப்பாத்த, ஆளில்லாம அடைப்பெடுக்க தானியங்கி இயந்திரம் தயாரிக்க முடியாதாடா?” என்று கண்கள் கலங்க ஆதங்கத்தைக் கொட்டினான் செல்வன். அவனை தோளோடு சேர்த்தவாறே “ விடு செல்வா, நாம பெரிய பசங்களானதும் அதெல்லாம் ஆராய்ச்சி பண்ணி நிச்சயம் கண்டுபிடிக்கலாம் சரியா? இப்போ சாப்டலாம் வா” என்றவாறே அவனது மதிய உணவை செல்வனோட பகிர்ந்து உண்ணத் தயாரானான். 

                      இருவரும் உணவில் கைவைக்கும் அதேதருணம், பள்ளியில் ஆயம்மா வேலை செய்யும் வள்ளி வந்து, “இது 10 “அ” வகுப்புதான?” என்ற தனது கேள்விக்கு “ஆம்” என்ற பதிலை உறுதிசெய்தவுடன் “இங்க செல்வன் யாரு?” என்ற அடுத்த கேள்வியை வைத்தாள். இருக்கையில் இருந்து எழுந்த செல்வன் “நான்தான் செல்வன்” என்று பதிலுரைத்தான். “கீழ உங்க மாமா காத்துட்டு இருக்காரு போய்ப் பாரு” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் வள்ளி. சற்றே குழப்பத்தோடும் பதட்டத்தோடும் படிகளில் இறங்கி பள்ளியின் வாசலுக்கு சென்றவன், அங்கு நின்று கொண்டிருந்த தன் மாமா நேசமணியைப் பார்த்து “என்னாச்சு மாமா?” சற்று பதட்டத்தோடு கேட்க, “ உங்க அப்பா இறந்துட்டார் பா. அதான் உன்னை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்” என்று சோகம் கலந்த குரலில் சொல்லி முடித்தார் நேசமணி. அவர் சொல்லி முடிக்கும் தருணத்தில், செல்வனின் உலகம் எங்கோ நழுவி ஓடிவிட, ஒன்றுமில்லாத சூனியமாய் காட்சிகளை கண்கள் உள்வாங்கின, கண்ணீரை மட்டும் அனிச்சையாய் அனுமதித்து விட்டு. கண்ணீரோடு படிகளில் ஏறி புத்தகப் பையை எடுத்துப் கொண்டு வேகமாய் இறங்கி தன் மாமாவுடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  நீர் கோர்த்தவாறே அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றன,  திலகனின் இருவிழிகளும்.

                    வழியெங்கும் வெளிறிப் போய்க் காட்சியளிக்க, தன் தந்தையின் நினைவுகளை அனிச்சையாய் சுமந்து கொண்டு நடந்து சென்றான் செல்வன், அவனது கவனத்தை அந்த மணியோசை ஈர்க்கும் வரை. செல்வன் வரும் வழக்கமான பாதையில் உள்ள சிறிய விநாயகர் கோயிலில், அவன் வழக்கமாகக் கேட்கும் மணியோசைதான், ஏனோ இன்று அவனை நகர விடாமல் தடுத்தது. சற்று நின்ற செல்வன் மணியோசை வரும் திசையை நோக்கித் திரும்பினான். அங்கே கையில் கற்பூரத் தட்டுடன் தொப்பை வயிற்றை தள்ளியவாறே நின்று கொண்டிருந்தார் அந்த ஐயர். அவர் முன்னே பவ்யமாக நின்றிருந்தனர் சில பக்தர்கள். அவர்களின் தலைக்கு மேலே சுவரோரத்தில் மாட்டிவைக்கப்பட்ட தானியங்கி இயந்திரம் தான் விடாமல் மணியடித்துக் கொண்டே இருந்தது. அதைக் கண்டதும் செல்வனின் கண்களின் கண்ணீரின் வேகம் அதிகரித்தது. அந்த ஒவ்வொரு துளியிலும் ஓராயிரம் கேள்விகள் எழுந்தன. கேள்விக்கான விடைகள் மெதுவாய் பிரசவித்துக் கொண்டிருந்தன, ஒரு புரட்சியாளனை.

                               — அசுரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலியுகக் கண்ணகி

அறிந்த கதை

நந்தினி