அறிந்த கதை
சித்திரை மாதம் நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எழிலன், அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். அவனைப் போலவே திடுக்கிட்டு எழுந்த அவள் தாய் வள்ளியும் கலவரத்தோடு மகனைப் பார்க்க அலறல் சத்தத்தின் வீரியம் அதிகமானது எழிலனின் செவிகளில். சற்றுப் பதட்டத்தோடு கதவை திறந்தவன் கண்ணெதிரே எதிர் வீட்டு மாடசாமியின் குடிசையை ஏணியாக்கி விண்ணை முட்ட முயற்சி செய்யும் நெருப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். மாடசாமி வீடு மட்டுமல்லாது, அடுத்தடுத்து இருந்த அத்தனை குடிசை வீடுகளும் நெருப்பின் பசியாற்றிக் கொண்டிருந்தன. ஊர்கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைக்க ஆண்களும் சில பெண்களும் ஈடுபட்டிருக்க, இன்னும் சில பெண்கள் மண்ணை வாரி கூரையில் வீசி தீயை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்க இன்னும் சிலரோ, தங்கள் குழந்தைகளையும், தங்களின் சேமிப்பையும் நெருப்பிடம் இருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சிமெண்ட் சாலை முழுவதும் தண்ணீரும் சகதியுமாய் அலங்கோலமாய் இருக்க, அங்கேயும் இங்கேயும் ஓடிய மக்கள் அந்தச் சகதியையும் பயன்படுத்த மறக்கவில்லை அந்தத் தீயை அணைப்பதற்கு. சற்றே சுதாரித்த எழிலன் கையில் வாளியுடன் கிணற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்த பொன்னனை இழுத்து, “ எங்க வீட்டுத் தொட்டியில இருந்து தண்ணி மொண்டுக்கோ” என்று தொட்டியைக் கைகாட்டி விட்டு, மின்மோட்டாரின் பொத்தானையும் அழுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றான். அதற்குள் வள்ளியும், கையில் ஒரு வாளியுடன் தண்ணீர் தொட்டி நோக்கி சென்றாள்.
உள்ளே சென்ற எழிலன் அலைபேசியை எடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் சொல்ல முயற்சித்தான். இரண்டு முறை முயற்சித்தும் யாரும் மறுமுனையில் அலைபேசியை எடுக்காததால், சற்றே எரிச்சலாடு வெளியே வந்தவன் தன் தாயிடம் இருந்து வாளியைப் புடுங்கி அவளின் கையில் அலைபேசியை திணித்து, “தீயணைப்பு வண்டிக்கு தகவல் சொல்லிடுமா” என
சொல்லிக்கொண்டே குடிசையை நோக்கி ஓடினான். வள்ளி படித்தது ஐந்தாம் வகுப்பு வரைதான் என்றாலும், அலைபேசியை பயன்படுத்த எழிலன் சொல்லிக் கொடுத்திருந்தான். அதனால் மகன் செய்த முயற்சியை இவள் தொடர ஆரம்பித்தாள்.
ஓலைகளை எல்லாம் விழுங்கிய நெருப்பு, துணை நின்ற மூங்கில் கம்புகள் முழுவதையும் ருசித்து முடிக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தது தீயணைக்கும் வண்டி. அதற்குள் தன் கோரத் தாண்டவத்தை ஆடி முடித்திருந்தது நெருப்பு. அடுத்த ஒருமணி நேரத்தில் நெருப்பை விரட்டியடித்து அந்தக் குடிசைப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்தது இருள், அதற்கு நெருப்பில் கருகிய மூங்கில் கம்புகளும் துணை சேர்ந்தன. அந்தக் கும்மிருட்டை எதிர்த்து, ஒருசில தெரு விளக்குகளும், தீயணைப்பு வண்டியின் முகப்பு. விளக்குகளும், நெருப்பில் இருந்து தப்பிப் பிழைத்த கைப்பேசியின் விளக்குகளும் போராடிக் கொண்டிருந்தன.
உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்ற ஒற்றை ஆறுதலோடு, மிஞ்சியப் பொருட்களை பத்திரப்படுத்தும் முயற்சியில் பெண்களும் சில ஆண்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்க, சில வாலிபர்கள் தீயணைப்பு வண்டியின் தாமதத்தை மன்னிக்க முடியாமல் அவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்தச்சேரியில் எழிலன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே கல்லு வீடு கட்டியிருந்தனர். மற்ற அனைவருக்கும் குடிசை வீடு தான். எல்லோரும் அருகில் உள்ள கிராமங்களில் விவசாய வேலை பார்ப்பவர்கள். அந்த வயல்களின் பசுமைக்கு இவர்களின் உழைப்பும் வியர்வையும் முக்கிய காரணம். தன் வீட்டுத் திண்ணையில் கண்ணத்தில் காய்ந்த கண்ணீருடன் அமர்ந்து இருந்த பச்சிளம் குழந்தைகளையும், சிறுவர்களையும் பார்த்தபடியே, தன்வீட்டு வாசலில் சரிந்தான் கலங்கிய கண்களோடு. எழிலனின் கன்னத்தைத் தொட்ட கண்ணீரில் தமிழின் நினைவுகளும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்த அந்த கோரச் சம்பவமும் நிறைந்திருந்தன.
தமிழரசன், ஒரு வேளாண் பட்டதாரி. காலங்காலமாய் செய்து வரும் விவசாயத்தை விட்டுவிட மனமின்றி, வேளாண்மைப் படிப்பை விரும்பித் தேர்வு செய்தான். பள்ளிப்பருவத்தில் தந்தையையும் கல்லூரிப் பருவத்தில் தாயையும் இழந்து நிற்கும் தமிழரசனுக்கு அந்தச்சேரி மக்கள் தான் ஆதரவு. ஏழைகள் என்றுமே உழைப்பதற்கு அஞ்சாதவர்கள், ஆயினும் அவர்கள் ஏழையாக இருப்பதற்கு காரணம், அவர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளே! இதை நன்றாக உணர்ந்திருந்த தமிழரசன், வருடக் குத்தகைக்கு ஒரு நிலத்தை வாங்கி, அதில் விவசாயம் செய்துவந்தான். ஈட்டுகின்ற லாபத்தை சேரிக் குழந்தைகளின் படிப்புக்கும், வேறு ஏதேனும் அவசியத் தேவைகளுக்கு செலவு செய்துவிடுவான். அடிக்கடி நடக்கும் விவசாயிகளின் தற்கொலை அவனை மிகவும் பாதித்தது, அதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து போராடுவது, கோரிக்கை மனு கொடுப்பது என்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான். அந்தக் கோர சம்பவம் நடக்கும் வரை.
ஊருக்குள் இருக்கும் கோவிலுக்குள் சேரி மக்களை அனுமதிக்காத ஊர்மக்களிடம் சண்டையிட்டு பயனில்லை, ஆளும் அரசாங்கமும், அதிகாரிகளும், தங்களுக்கு துணையாய் இல்லை என்பதை நன்கு உணர்ந்த மானூர் சேரி மக்கள், தங்களுக்கென்று ஒரு கோவிலை ஊருக்கும் சேரிக்கும் இடையில் கட்டியிருந்தனர். அந்தக் கோவிலின் திருவிழா களைகட்டத் தொடங்கியது.
பிழைப்பு நடத்த பட்டணம் சென்ற மண்ணின் மைந்தர்களும், பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் என உற்றார் உறவினர்களும் சாதிகளுள் மறந்து சமத்துவமாய் பழகும் நண்பர்ளுமாய் குவியத் தொடங்கினர். கோவில் முழுவதும் புதுவண்ணம் பூசி, வண்ண வண்ணத் துணிகளில் பந்தல் போட்டு, வண்ண விளக்குகளால் அலங்கார முகப்பு வைத்து, மின்சாரக் கம்பங்களில் எல்லாம் பெரிய பெரிய ஒலிப்பெருக்கிகளைப் பிணைத்து, ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. கன்னியரைக் கவர விடலைப் பசங்க நடத்தும் விளையாட்டு என மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாத திருவிழாவிற்கு, திங்களன்று பொங்கல் வைத்து, செவ்வாயன்று முளைப்பாரி ஏடுத்து, புதனன்று கிடா வெட்டில் முடியும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விடிய விடிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்நாள் இரவு கரகாட்டம், இரண்டாம் நாள் இரவு தெருக்கூத்து, மூன்றாம் நாள் இரவில் வில்லுப்பாட்டு என கிராமியக் கலைகளை ஊக்குவிக்கும் இந்த திருவிழாக்கள். மூன்றாம்நாள் நடக்கும் வில்லுப்பாட்டு மட்டும் கிடா வெட்டி திருவிழா முடியும் வரை தொடரும்.
தமிழரசனும் எழிலனும் தான் விழா ஏற்பாட்டாளர்கள் என்பதால், பம்மபரமாய் சுழன்று கொண்டிருந்தனர் இருவரும். திருவிழா ஆரம்பிப்பதற்கு முதல் நாள் காலை, மானூரின் ஊர்த்தலைவர் தங்கராசு இறந்து விட, அவரது சடலத்தை எடுக்கும் வரை, திருவிழா ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. ஊர் வழக்கப்படி திருவிழா சமயங்களில் மரணம் நிகழ்ந்தால், இறுதிச் சடங்குகளை விரைவாக முடித்துவிடுவர், அதன்பிறகு திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆயினும் சாதி என்னும் சாக்கடையில் ஊறிய சில கழுகுகளால், தங்கராசுவின் இறுதிச் சடங்குகள் அவசரம் ஏதுமின்றி மாலை தான் முடிந்தது. ஊர்த்தலைவர் என்ற மரியாதை கருதி அதைப் பெரிதுபடுத்த விரும்பாமல் தங்கள் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். திருவிழா தொடங்கும் நாள் காலையில் தங்களுக்கு வருகின்ற கொடுவினையெல்லாம் தீர்ப்பான் விநாயகன் என்ற நம்பிக்கையில் “விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற பாடல் ஒலிப்பெருக்கியில் அலற, ஆரவாரம் பூண்டனர் சேரி மக்கள்.
அந்த விநாயகனே வினையைக் கொண்டு வந்தான். ஆம்! பாடல் ஆரம்பித்ததுதான் தாமதம் ஊரே ஒருவித பதட்டம் அடைந்தது. “செத்த மனுஷன அடக்கம் பண்ணின ஈரம் கூட காயல அதுக்குள்ள பாட்டு போட்டு கூத்தடிக்கிறானுவ இந்த ஈனசாதிப் பயலுக” என முதல் குரல் எழுப்பினான் ஒன்றுக்கும் உதவாத சாதிப்பெருமையை பீற்றித் திரியும் அந்த ராசா. இவன் பற்ற வைத்த தீ ஊர் முழுக்கப் பரவியது. வழக்கத்தை மறந்து அனைவரும் சாதிப்பெருமையில் ஊறிப்போய் மிருகங்களாய் மாறி நின்றனர். துக்க நிகழ்ச்சியையும் மறந்து திருவிழாவை நடத்த விடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி வளர்ந்து கொண்டிருந்தது. கோபத்தை தலைக்கேற்றிக் கொண்டு திருவிழாவை நடத்த விடக்கூடாது என்ற முடிவோடு விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
முதல்நாள் அம்மனுக்கு பொங்கல் வைப்பதற்காக கற்களைக் கொண்டு அடுப்பை சமைத்துக் கொண்டிருந்தனர் பெண்கள். அங்கு தங்களுக்குப் பிரியமான யுவதிகளைத் தேடி விடலைப் பசங்கள் கூட்டம் ஒன்றும் சுற்றிக் கொண்டிருந்தது. பாதுகாப்புக்காக வந்த காவலர்கள் சிலர் வேலை செய்துகொண்டே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். ஒத்த அறையில ஒய்யாரமாய் இருந்த சாமிக்கு, பூசைக்குத் தேவையான பொருட்களை எழிலன் கவனித்துக் கொண்டிருக்க, கோவிலின் அருகிலேயே ஒரு மேசையைப் போட்டு, திருவிழாப் பந்தலின் நிழலில் கோவில் வரிக் கணக்குகளை கவனித்துக் கொண்டிருந்தான் தமிழரசன். அப்போதுதான் அங்கு வந்தது அந்த கொலைவெறிக் கூட்டம். அவர்களைப் பார்த்துக் குழப்பமடைந்த நிலையிலும் தமிழரசன், எழிலன் உள்ளிட்ட விழா ஏற்பாட்டாளர்கள், தமிழர்களுக்கே உரிய விருந்தோம்பலினால் அவர்களை வரவேற்க தவறவில்லை. ஆனால் அதை எதிர்பார்த்து அவர்கள் வரவில்லை என்பதால் சற்று சூடாகவே ஆரம்பித்தது வாக்குவாதம்.
“அங்க ஊர்த்தலைவர் இறந்த சோகத்துல நாங்க இருக்கோம் இங்க திருவிழா வச்சி நீங்க கூத்தடிக்கிறீகளோ?” என்று பிரச்சினையை ஆரம்பித்தான் நரேந்திரன். “இவனுங்களுக்கு நம்ம கண்டு பயம் போயிடுச்சு இல்லன்னா இப்படி பண்ணுவானுங்களா?” என்று தன் பங்குக்கு கொளுத்திப் போட்டான் ராசா. இதைக்கேட்ட இளசுகளுக்கு சுயமரியாதைப் பெருக்கெடுக்க அங்கே சலசலப்பு உண்டானது. நிலைமையை உணர்ந்த ஊரப்பெரியவர்கள் இளசுகளை சமாதானப்படுத்திவிட்டு வந்தவர்களிடம் பேச ஆரம்பித்தனர். “ இங்க பாருங்க நாங்க ஏதும் வழக்கத்தை மீறிப் பண்ணல.திருவிழா சமயத்தில ஊர்ல யாராவது இறந்துட்டாங்கன்னா, இறுதிச்சடங்கை உடனே முடிச்சிட்டு திருவிழாவை நடத்தனுன்றதுதான் ஊர் வழக்கம். ஆனா நீங்க இறுதிச்சடங்கை மெதுவாதான் பண்ணீங்க அதை நாங்க பெருசா எடுத்துக்கல. இப்ப திருவிழா நடக்கும் போது பிரச்சினை பண்ணா என்ன அர்த்தம்?” என்று பெரியவர் ராமசாமி கூற கூட்டத்தில் மீண்டும் ஒரு சலசலப்பு. ஏற்கனவே திருவிழாவை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு வந்த ராசா “எங்க எச்சிலை தின்னு வளர்ந்த ஈனசாதிப்பய, நீ எங்களுக்கு ஊர்வழக்கத்தை சொல்றியா?” என்று கேட்டதும், “பணத்தைத் தவிர எந்த விதத்திலும் உங்களுக்கு நாங்க இளைச்சவங்க இல்ல” என்று தமிழரசன் சொன்னதுதான் தாமதம், கூட்டத்தில் வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. வாரத்தைகள் தடித்து கைகலப்பு உருவாக பதட்டம் இன்னும் அதிகரித்தது. பதட்டம் கண்டு பரபரப்பான காவல்துறை கூட்டத்தினரை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, திடீரென ஒரு அலறல் சத்தம் பாதி தொங்கும் கழுத்தில் கைவைத்தவாறே, நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தான். இளநீர்க் கறையோடும் ரத்தமும் தோய்த்த அந்த அரிவாளை ஊர்ப் பண்ணையாரின் மகன் சீதாராமன் ஏந்தியிருந்தான். அதே நேரத்தில் அங்கு வந்த காவல் படை நிலைமையை உணர்ந்து தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது. அதற்குள் தமிழரசனின் உயிர் அவன் குருதி வழியே அந்த மண்ணில் கலந்துவிட்டிருந்தது.
“அண்ணே” என்ற குரல்கேட்டு நிகழ்காலத்திற்கு வந்த எழிலன் எதிரில் நின்ற மாறனை ஏறிட்டு “சொல்லுப்பா” என்பதுபோல் பார்க்க, புரிந்து கொண்ட மாறனும், “நம்ம குடிசையை அவனுங்கதாண்ணே கொளுத்தியிருக்கானுங்க, இதோ இவன் நேர்ல காத்திருக்கான் அண்ணன்” என்றவாறே செல்வனை கைகாட்டினான். “ தமிழ் அண்ணே மாதிரி நாமளும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பாக்குறது அவனுங்களுக்கு பிடிக்கலையாண்ணே, அதனால வீட்டை எரிச்சிட்டா குடிசை போட, பாத்திரம் வாங்க அவங்க கிட்ட கடன் வாங்கனும், அதை வச்சு நம்மள மறுபடியும் அவங்க அடிமையா வச்சி வேலைவாங்கலாம்னு அவனுங்க ஊர்ல பேசிட்டு இருந்தானுங்கண்ணா. அதுக்காகத்தான் அலறியடிச்சி ஓடிவந்தேன் அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சி” என்று கலங்கிய கண்களோடு சொல்லி முடித்தான் செல்வன்.
அவர்கள் செய்யும் வஞ்சகச் செயல்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் சட்டப் போராட்டம் மட்டும் போதாது, நாம் இழந்ததை மீட்க உரிமைப் போராட்டத்தையும், நடத்தியாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த எழிலன் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஆனால் அது முடிவல்ல, சாதிகள் இல்லாத சமுதாயத்தின் முதல்படி.
— அசுரன்
கருத்துகள்
கருத்துரையிடுக