தங்கத்தாலி


  அங்கம்மாள் வீட்டு வாசலில் வழக்கம்போல் இந்த மாதமும் அவளிடம் சீட்டு போட்டிருந்த பெண்கள் ஏலம் கேட்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். குறைவான தள்ளு போனால் சீட்டு எடுத்துவிடலாம் என்ற ஆவலோடு மீனாட்சியும் காத்திருந்தாள். ஏலம் தொடங்கியது, 15000 ரூபாய்க்கான சீட்டை 1000 ரூபாய் பீட் என ஆரம்பித்தாள் அங்கம்மாள். மீனாட்சி ஏலம் கேட்குமுன்பே பக்கத்து வீட்டு பார்வதி 2000 ரூபாய் என ஆரம்பிக்க, பூக்காரி கண்ணம்மா 2500 ஏற்றிவிட, ஆளுக்கொரு ஏலம் கேட்க இறுதியாய், தங்கத்தாலி வாங்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்ட மீனாட்சி 5200 என ஏலம் கேட்க, அதற்குமேல் பணத்தை விட்டுக் கொடுக்க யாருக்கும் மனமில்லாததால், 5200 என மூன்று முறை கூவிவிட்டு ஏலத்தை முடித்தாள் அங்கம்மாள். இந்த சீட்டுப் பணத்தைக்கொண்டு வரும் தீபாவளிக்கு முன் தங்கத்தில் தாலிக்கொடி வாங்கி அணியலாம் என்று ஆவல் மேலோங்க தன்வீடு  திரும்பினாள் மீனாட்சி.
வீட்டில் வழக்கம்போல் அவளது கணவன், டாஸ்மாக் நண்பனை அணைத்தபடி சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவனது தலையருகில், அரசாங்கம் இலவசமாய்க் கொடுத்த மின்விசிறி, தன் எசமானுக்கு சேவை செய்துகொண்டிருந்தது. அரசாங்கம் இலவசமாய் தந்த வண்ணத்தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர் ஆகியன வீட்டு வாடகைக்கும், சில அவசர தேவைகளுக்கும் உதவியாய் இருந்துவிட்டு தங்களின் கடமையை முடித்துக்கொண்டன. ஆனால் இந்த மின்விசிறி மட்டும் இன்னும் தன்கடமையை செய்து கொண்டிருக்கிறது. மீனாட்சியின் மகன் வெற்றிமாறன் வீட்டுப்பாடம் செய்து முடித்துவிட்டு புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தான். மீனாட்சியைக் கண்டதும் “அம்மா ஸ்கூலுக்கு டைம் ஆச்சு, சாப்டலாமா என்று கேட்க”, “இதோ சாப்டலாம் செல்லம்” என்று கூறிக்கொண்டே ஒற்றையறை மட்டுமே கொண்ட அந்தவீட்டின் ஒருமூலையை நோக்கி நடந்தாள். அடுப்பின் மீதிருந்த ஈயப் பானையை எடுத்து கீழேவைத்துவிட்டு, இரண்டு தட்டும், ஊறுகாய் சாடியையும் எடுத்துக்கொண்டு மகனை அழைத்தாள். ஊறுகாயைத் துணையாகக் கொண்டு, அந்த பழையசோறை உண்டுவிட்டு, பள்ளிக்குக் கிளம்பினான் வெற்றி. தனது சிட்ட்றுண்டியையும் முடித்துக் கொண்டு, தன் கணவனுக்கு வேண்டிய சாப்பாட்டையும் எடுத்துவைத்துவிட்டு, வீட்டு வாசலுக்கு வந்தவள், அருகிலிருந்த கங்காவைக் கூப்பிட்டு அவளது உதவியோடு மரப்பலகையால் மூடப்பட்டிருந்த ஈயத்தாலான மீன்கூடையை எடுத்து, தலையில் சுருட்டி வைத்த துண்டின் மீது வைத்துக்கொண்டு, தனது வியாபாரத்திற்கு கிளம்பினாள்.
“மீனும்மா மீனு........ வஞ்சிரம், கெளுத்தி, தேளி, நவரை, மீனும்மா மீனு” என்று கூவியபடியே தான் வழக்கமாக செல்லும் தெருக்களின் வழியே சென்றாள். தனது வாடிக்கையாளர்களிடம் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சாலையோர மரத்தின் நிழலில் அமர்ந்து கடை விரித்தாள். அது மூன்று தெருக்கள் சங்கமிக்கும் முச்சந்தி. அங்கு அவளுக்கென்றே வளர்ந்தது போல் இருந்தது அந்த வேப்பமரம். கூடையை தரையில் வைத்து அதன் மேலுள்ள மரப்பலகையில் தன்னிடம் உள்ள மீன் வகைகளை கூறுகளாய் வைத்தாள்.  அழையா விருந்தாளிகளாக காகங்கள் அவளை அரவணைத்து நின்றன. விருந்தோம்பலில் சிறந்த மரபினைச் சேர்ந்தவளாயினும், தற்போதைய சூழ்நிலையில் அந்த அழையா விருந்தாளிகளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள். இடையிடையே அவளது நினைவுகள் அவளது கடந்த காலத்தை நோக்கி சென்றன.
மூட்டைத் தூக்கும் முனுசாமிக்கு மூன்றாவது மகளாய்ப் பிறந்தவள் இந்த மீனாட்சி. ஏழ்மை நிறைந்த வீட்டில் வயிற்றை சமாளிக்கவே வழியில்லாததால் பள்ளிக்கூடத்திற்கான வழியை அவர்கள் அறியவில்லை. மீனாட்சிக்கு விவரம் தெரிந்த நாள்முதல் அருகிலுள்ள துணிக்கடையில் சின்னச்சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தாள். அதே கடையில் அவளது சகோதரிகளும் வேலை செய்தனர். தேனீர் வாங்கிக் கொடுப்பது கண்ணாடிகளை சுத்தம் செய்வது என சிறுசிறு வேலைகள் செய்வாள் மீனாட்சி. வார இறுதியில் சம்பளப் பணத்தை அம்மாவின் கைகளில் கொடுத்துவிட்டு, ஞாயிறு அன்று அசைவம் சமைத்து ஒய்வு எடுப்பதுதான் அவர்களது வாழ்வாகிப் போனது. பெண்களுக்கு இயல்பாகவே இருக்கின்ற தங்கமோகம் மீனாட்சிக்கும் வந்தது. சிக்கனப்படுத்திய பணத்தில் மீனாட்சியின் தாயார், தனது இரண்டு அக்காவிற்கும் தங்க கம்மலும்வாங்கிக்கொடுத்தபோது. “அம்மா எனக்கு எப்பம்மா தங்கம் வாங்கித்தருவ?” என்று ஏக்கத்தோட கேட்ட மீனட்சியின் தலையை தடவியபடி “நீ பெரியவாளனதும் வந்கித்தறேண்டி செல்லம்” என்று அவளுக்கு திருஷ்டி சுத்தி தன்நெற்றியில் நெட்டுடைத்த அவளது அன்னையின் அன்பை நினைத்த மாத்திரத்தில் தன்னையறியாமல் கண் கலங்கினாள் மீனாட்சி. 

“ஏம்மா நவரை கூறு எவ்வளவு?” என்ற குரல் கேட்டு அவசரமாக கண்களைத் துடைத்தவள், ஒரு வழியாக பேரம்பேசி வியாபாரத்தை முடித்தாள். மீண்டும் தன் பழைய நினைவுகளைத் தேடிப்போனாள். 19 வயதில் அவளது மூத்த அக்காவிற்கு திருமணம் முடிக்கும்போது அவள் அணிந்திருந்த தங்க நகைகள் இரண்டுதான் ஒன்று தங்க கம்மல் அடுத்தது மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட தங்கத்தாலான தாலி. அன்றுமுதல் கல்யாணம் ஆகும்போது நமக்கும் தங்கத்தாலி கிடைக்கும் என கனவில் மிதந்தாள் விவரமறியாத மீனாட்சி. அவளது இரண்டாவது அக்காவிற்கும் திருமணம் முடிய, அவளது ஆவல் மேலோங்கியது தங்கத் தாலிக்காக. ஆனால் எதிர்பாராத விதமாக அவளது தந்தை நோய்ப்பட்டு படுத்துவிட, அவரது மரணத்திற்கு முன்பாக மீனட்சியின் திருமணத்தை முடிக்க எண்ணி அவளது 17 வது வயதில் தூரத்து உறவுமுறையான சங்கரனை, மஞ்சள் கயிற்றில் ஒரு மஞ்சள் துண்டைக் கட்டி மணமுடித்தார்கள். திருமணத்தின் போது அவளது அழுகை எல்லை மீறியது. தந்தையை நினைத்து அழுவதாக எண்ணி அவளை பலரும் சமாதானம் செய்தனர். அது உண்மைதான் என்றாலும் ஒரு ஓரத்தில் தன் நிறைவேறாத ஆசைக்காக சில துளிகளை ஒதுக்கிவிட்டாள். அன்று அழ ஆரம்பித்தவள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை. அப்பாவின் மரணம், சில காலங்களில் அம்மாவின் மரணம், இதற்கும் மேலாக குடிகாரக் கணவன்.
திருமணத்திற்கு முன்பு தன் கணவனின் தொழில் என்ன, குணநலன்கள் என்ன என்பதை சற்றும் அறியவில்லை மீனாட்சி. தந்தையின் நிலைமை தாயின் கண்ணீர், அவளை கேள்விகள் கேட்க அனுமதிக்கவில்லை. பிறகுதான் அறிந்தாள், தன் அன்னையைப் போலவே தானும் சுமைதூக்கும் தொழிலாளியின் மனைவி என்பதை. அதை நினைத்து அவள் கர்வம் கொள்ளவும் இல்லை கலங்கவும் இல்லை. திருமணமான புதிதில் முதல்முறை தன்கணவன் குடித்துவிட்டு வந்தபோது சற்று அதிர்ந்துதான் போனாள். காரணம் அவளது தந்தை குடித்ததில்லை, அக்காமார்களின் கணவர்களும் கூலிவேலை செய்தாலும் குடிப்பதில்லை. பிறகுதான் தெரிந்தது அவன் மிகப்பெரிய குடிகாரன் என்று. காரணம் கேட்டால், உடல் அலுப்பு தீர்வதற்காக குடிக்கிறேன் என்று சப்பைக் காரணம் கூறுவான். ஆனால் விரைவிலேயே பழகிப்போனாள், குடிகாரக் கணவனுக்கும், அவன்தரும் அடிஉதைக்கும். அவன்தரும் சொற்ப பணத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்தாள். இத்தனை துன்பத்திலும் அவள் ஆனந்தம் கொண்டாள், தான் பெற்ற ஆண்மகனால். குழந்தையின் மருத்துவ செலவுக்கும், இன்னபிற செலவுகளுக்கும், குடிகாரக் கணவனை நம்பி பயனில்லை என்பதால், வீட்டுவேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அங்கும் வந்து தன் குடிகாரக் கணவன் தொல்லை கொடுக்கவே, யாரும்  அவளை வீட்டு வேலைக்கு அழைப்பதில்லை. இறுதியாக, அடுத்த தெருவில் குடியிருக்கும் மீன்கார வசந்தியின் உதவியால் மீன் கூடையை ஏந்தியவள், இன்னும் அதை இறக்கவில்லை.

                       உடலாலும், உள்ளத்தாலும் சுகப்படாத தன் கணவனை விட்டு விலகிச்செல்ல ஏனோ, அவள் நினைத்ததில்லை. அதற்குக் காரணம், தெருவில் மேயும் மாடுகள் எல்லாம் தன்வீட்டுக் கூரையை மேய்ந்துவிட முற்படுமே, என்ற அச்சமாக கூட இருக்கலாம்.  இல்லையெனில் முழுநேரக் குடிகாரனான தன் கணவனுக்குத் தன்னை விட்டால் ஆதரவு தர வேறு யாருமில்லை என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
தன்னுடைய வலிமை அறியாத பெண்கள் சமூகத்தைப் போலவே அவர்களின் மனதையும் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை.
      
                     மனம் முழுக்க தங்கத்தாலியின் சிந்தனையோடு அன்றைய வியாபாரத்தை முடித்தவள், சீட்டுப்பணத்தை வாங்கும் ஆவலோடு ஓட்டமும் நடையுமாக தன் வீட்டை அடைந்தாள். அங்கே அவளது குடிகாரக் கணவன் இல்லை. ஆனால் அது வழக்கமான விடயம் தான் என்பதால், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், புடவையை மாற்றிக்கொண்டு கங்காவை அழைத்தாள். இவளது அழைப்புக்காகவே காத்திருந்த கங்காவும் உடனே ஓடிவர, இருவரும் அங்கம்மாள் வீட்டை நோக்கி நடந்தார்கள். மீனாட்சியைப் பற்றி முழுமையாக அறிந்திருந்த அங்கம்மாளும் அவள் வருவதற்கு முன்பே அவளுக்கான சீட்டுப்பணத்தை எடுத்து வைத்திருந்தாள். பணத்தை வாங்கிய கையோடு கங்கா வாடிக்கையாக நகை வாங்கும் கடையை நோக்கி இருவரும் விரைந்தார்கள்.

                      “மணீஷ் தங்க மாளிகை” என்ற பெயர்ப்பலகை தாங்கிய கடைக்குள் கங்காவும் மீனாட்சியும் நுழைந்தார்கள். கங்கா அந்தக் கடைக்கு ஏற்கனவே பரிச்சயப்பட்டவள் என்பதால் வழக்கமான நலம் விசாரிப்புகள் நடந்து கொண்டிருக்க, கடையில் பார்வையைத் தவழவிட்டாள் மீனாட்சி. காதுக்கு, கழுத்துக்கு, கைக்கு என வகை வகையான தங்க நகைகள் கடையை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவை எவற்றிலும் கவனம் பதியாமல் தனக்கான தாலியைத்தான் தேடியது. அவள் பெண்ணாக இருந்தாலும் ஏழை என்பதால் தேவைக்கு அதிகமானதை விரும்பவில்லை போலும். மாறுபட்ட அளவுகளில், வெவ்வேறான எடைகளில் இருந்த தாலிகளில் தன்னுடைய கைப்பணத்துக்கு ஏற்ற தாலியைத் தேர்வு செய்தாள் மீனாட்சி.  பணத்தைக் கொடுத்து தாலியை கையில் வாங்கும்போது கண்களில் நீர் அரும்பியிருந்தது மீனாட்சிக்கு. வரும் வெள்ளிக்கிழமை வாங்கிக் கொள்வதாகக் கூறி, கங்காவிடம் கொடுத்து வைத்தாள் அந்தத் தாலியை.

              மஞ்சள் கயிற்றில் இந்தத் தாலியைக் கோர்த்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அணிந்து கொள்ளலாம் என்ற ஆசையோடு வீட்டுக்குள் நுழைந்த மீனாட்சி அதிர்ந்து நின்றாள். அவள் எதிரில் ரத்த வாந்தியில் தவழ்ந்தபடி மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்தான் மீனாட்சியின் கணவன். சற்று சுதாரித்த மீனாட்சி, அக்கம்பக்கத்தினரை அழைத்து மூன்று சக்கர மிதிவண்டியில் அவனைக் கிடத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர் “ ஆள் இறந்துட்டாருப்பா” என்ற ஒற்றை வாக்கியத்தில் தன் கடமையை முடித்துக் கொண்டார்.
 
                மருத்துவரின் வார்த்தையைக் கேட்ட மீனாட்சியின் அழுகை கதறலாக மாறியது. அந்தக் கதறலோடு சேர்ந்த கண்ணீரில் அவள் கனவும் கரைந்து போனது.

                                                — அசுரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலியுகக் கண்ணகி

அறிந்த கதை