கலியுகக் கண்ணகி



               திருவான்மியூர் அடுத்துள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள ‘நல்ல உள்ளங்கள்’ அறக்கட்டளை இல்லம் ஆதரவற்ற  30 குழந்தைகளுக்கு அன்னை இல்லமாக விளங்குகிறது. அதில் 13 வயதாகும் மலர்கொடியும் ஒருவள். பிறந்தவுடனே தன் தாயை இழந்த மலர்கொடி, தன் ஏழாம் வயதில் ஒரு விபத்தில் தன் தந்தையையும் பறிகொடுக்க, சில நல்ல மனிதர்களின் தயவால் இந்த இல்லத்திற்கு வந்த அவளுக்கு அன்று  முதல் இதுவே தாய்வீடானது. இந்தத் தாய் வீட்டிலும் அவள் பல இன்னல்களைசந்தித்திருந்தாள். அவள் துன்பம் போக்கி தற்போது அவளுக்கு ஆதரவாய் இருப்பது நல்ல உள்ளங்கள் அறக்கட்டளையின் தலைவராயிருந்த குணசுந்தரின் மனைவி மீனாட்சி. இப்போது மலர்கொடிக்கு தாயாகவே மாறியிருந்தாள் மீனாட்சி. 
மலர்கொடிக்கு கணக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்த மீனாட்சி அங்கு வேலை செய்யும் அன்னம்மாளின் குரல் கேட்டு திரும்பினாள்  "அம்மா உங்களைப் பார்க்க வக்கீல் ஐயா வந்திருக்காரு முன் அறையில் உட்கார்ந்திருக்கார்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் அன்னம்மாள்.  மலர்கொடியைகணக்கு போட சொல்லிவிட்டு முன்னறை நோக்கி நடந்தாள் மீனாட்சி. முன்னறையில் இரண்டு வயதான குமரனிடம் விளையாடிக் கொண்டிருந்த வக்கீல் முருகேசனை வரவேற்ற மீனாட்சி "என்ன சார்  எப்படி இருக்கீங்க? தொழிலெல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?" என்று குசலம்  விசாரித்தாள்.  தன் நலம் மற்றும் தொழிலைப் பற்றிய முன்னுரையைகொடுத்துவிட்டு வழக்கைப் பற்றி பேசத் தொடங்கினார்முருகேசன்.
"நாளைக்கு நம்ம வழக்கின் தீர்ப்பு, அதான் உங்ககிட்ட சொல்லிட்டு ஞாபகப்படுத்திட்டு போகலாம்னு வந்தேன் மேடம்" என்று தான் வந்த காரணத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் முருகேசன். "எப்படிங்க மறக்க முடியும், என்னோட மீதி வாழ்க்கை இந்த கள்ளங்கபடம் இல்லாத குழந்தைகளோடவா இல்ல ஜெயிலிலா என்ற முடிவு தெரியும் நாளல்லவா?" என்று தானும் அந்த வழக்கைப் பற்றிய சிந்தனையில் இருப்பதைக் கூறினாள். "கவலை வேண்டாம் மேடம்,  நிச்சயம் தீர்ப்பு நம்ம பக்கம்தான். நாளைக்கு நீதிமன்றத்தில் சந்திக்கலாம் மேடம்" என்று நம்பிக்கை  வார்த்தைகள் கூறிவிட்டு விடை பெற்று சென்றார் முருகேசன். முருகேசன் சென்ற பிறகு தன்னையே மறந்த மீனாட்சியின் நினைவுகள் கடந்த காலம் நோக்கி சென்றது.
மதுரை அருகே உள்ள சிறிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்  மீனாட்சி. "தனி மரம் தோப்பாகாது" என்பார்கள். தன் குடும்பத்தில் ஒரே மகளாய் பிறந்திருந்தாலும், பிற்காலத்தில் பலருக்கும் நிழல் தரும் விருட்சமாய் வளருவாள் என்பதை அவளது பெற்றோரும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஒரே மகள் என்பதால் வெளியூருக்கு அனுப்ப மனமில்லாத தன் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்கி  தங்கள் ஊரில் உள்ள கல்லூரியிலேயே பட்டப்படிப்பை முடித்தாள் மீனாட்சி. தன் ஒரே மகளுக்கு மாப்பிள்ளை தேடும் வேலையை தொடங்கியிருந்தார் மீனாட்சியின் அப்பா செல்லத்துரை.  படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கபிடிக்காத மீனாட்சி தாம் படித்த கல்லூரியிலேயேகணக்காளராக பணியாற்றி வந்தாள்.  ஒரு முறை கல்லூரியின்சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைப்பதற்காக வந்திருந்தார்  சமூக சேவகர்  குணசுந்தர். சென்னையில்  வலம் வரும் முக்கிய தொழிலதிபர்களில்  இவரும்ஒருவர். சமூக சேவையின் மீது கொண்ட அளப்பறியா ஆவல்காரணமாக பொது மக்களின் நலம் விரும்பும் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமானவர். மீனாட்சியை பார்த்த உடனே பிடித்து போக சற்றும் தாமதிக்காமல் மீனாட்சியின் பெற்றோரிடம் தன்விருப்பத்தை தெரிவித்தார் குணசுந்தர். இத்தனை பெரிய மனிதர் தன் மகளைக் கேட்டு வந்ததை அறிந்து பூரித்து போயினர் மீனாட்சியின் பெற்றோர். பெற்றோரின் இன்பத்தை பெரிதும் விரும்பிய மீனாட்சி தன் சம்மதத்தை தெரிவித்தாள்.  இத்தனை நாள் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த தன் மகன் திருமணம் செய்ய சம்மதித்ததால், அந்தஸ்து பேதம் பார்க்காமல் பச்சை கொடி கட்டினர் குணசுந்தரின் பெற்றோர்.
               அடுத்த சுபமுகூர்த்த தினத்திலேயே குணசுந்தரும் மீனாட்சியும் இன்பக் கனவுகளோடு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தனர். திருமணம் முடிந்த மறுநாள், தான் பிறந்து வளர்ந்த கிராமத்தை விட்டு அன்பு பெற்றோரையும் விட்டுவிட்டு கணவனோடு சென்னைக்கு வந்தாள். திருவான்மியூரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சொந்த பிளாட்டில் தனிக்குடித்தனம் நடத்த தொடங்கினர் குணசுந்தர்-மீனாட்சி தம்பதியினர். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி இன்பமாக வாழ்ந்தார்கள், அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்தப் புயல்வீசும்வரை. 
                குணசுந்தருக்கு சொந்தமாக சென்னையின் முக்கிய இடங்களில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எனப்படும் பல்பொருள் அங்காடிகள் இருந்தன அதனால்  வசதிக்கு குறைவில்லை. அதே நேரம்  சமூக சேவையில் தன்னை முழுமையாகஈடுபடுத்திக் கொண்ட குணசுந்தர் தன் நெருங்கியநண்பர்களுடன் இணைந்து "நல்ல உள்ளங்கள்" என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் ஆதரவற்ற பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தான். “நல்ல உள்ளங்கள்” அறக்கட்டளை இல்லத்தில் 6 மாதம் முதல் 13வயது வரை உள்ள 30 குழந்தைகள் வரை இருந்தனர்.இல்லத்தை கவனித்துக் கொள்ள திறமையான ஆட்கள்நியமிக்கப்பட்டிருந்தும்,  குணசுந்தர் தன் நாளின் பெரும் பகுதியை அந்த இல்லத்திலேயே கழித்தான். அங்கு அந்த பிஞ்சு குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுவதே அவனது முக்கிய பொழுதுபோக்கு. இத்தனை நல்ல கணவர் தனக்கு வாய்க்கப் பெற்றதை எண்ணி பூரித்து போனாள் மீனாட்சி. தன் கணவரோடு சில நேரங்களில் மீனாட்சியும் இல்லத்திற்கு சென்று அந்த குழந்தைகளோடு விளையாடுவாள். அதனால் அங்குள்ள அனைத்து
குழந்தைகளைப் பற்றியும் அறிந்திருந்தாள்  மீனாட்சி. அந்தவகையில் மலர்கொடியைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தாள். எப்பொழுதும் சோகம் படர்ந்த முகத்தோடு காணப்படும் அவளைநினைத்து பல நேரங்களில் தன்னை அறியாமல் கண்ணீர் உதிர்ப்பாள் மீனாட்சி. ஆனால் மீனாட்சியிடம் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை மலர்கொடி.
                            இந்த சூழ்நிலையில் எதேச்சையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த அறக்கட்டளை இல்லத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி தொடர்பான புகைப்படங்களைப் பார்த்த மீனாட்சி சற்று அதிர்ந்துதான் போனாள். காரணம் அனைத்து புகைப்படங்களிலும் புன்னகைமாறாமல் காட்சி கொடுத்தாள் மலர்கொடி. காரணம் புரியாதவளாய் அது மலர்கொடி தானா என்று உறுதிப்படுத்த பக்கத்தில் இருந்த அன்னம்மாளை அழைத்தாள் மீனாட்சி. "ஆமாம்மா அது மலர்கொடி  தான் . வந்த புதிசில அதுவும்அழுதுக்கிட்டு தான் இருந்தது அப்பறம் ஒரு வழியா தன்னைதேத்திக்கிட்டு சகஜமாயிடுச்சி. பட்டாம்பூச்சி மாரி சுத்தி சுத்திவரும், கலகலன்னு இருக்கும். இப்ப ஒரு ஆறு மாசமாத்தான்இருண்ட முகத்தோட  இருக்கு. நானும் காரணம் கேட்டு பார்த்தேன்மா ஆனா அழுவுமே தவிர பதில் சொல்லாது." என்று தனக்கு தெரிந்த விவரத்தை சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க சென்று விட்டாள் அன்னம்மாள். பெற்றோரின் பிரிவேமலர்கொடியின் சோகத்திற்கு காரணம் என்று நினைத்திருந்தமீனாட்சி இடையில் அவளுக்கு என்ன நடந்திருக்கும் அதுவும் இத்தனை பாதுகாப்பு நிறைந்த இந்த சூழ்நிலையில்???? என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள். மலர்கொடியிடம் பேசி அவளது பிரச்சினை என்னவென்று கேட்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தீர்க்கமாய் முடிவெடுத்தவளாய் மலர்கொடியைத் தேடினாள்.
                             அந்த அழகிய பூந்தோட்டத்தில் அமைந்திருந்த சிமெண்ட் பெஞ்சில் அன்று பூத்த புது மலர்கள்  சிந்திய புன்னைகையை ஏக்கத்தோடு ரசித்தபடி அமர்ந்திருந்தாள் மலர்கொடி .  மீனாட்சி தன் அருகே வருவதை உணர்ந்த அவள் எழுந்து செல்ல முயன்றாள். "மலர்கொடி கொஞ்சம் நில்லு" என்ற மீனாட்சியின் பரிவுமிக்க கட்டளையால் அவள் கால்கள் அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே நின்றுவிட்டன. மலர்கொடியின் தலையைக் கோதியபடியே அவளோடு பெஞ்சில் அமர்ந்த மீனாட்சியின் முதல் தொடுதலில் தாயின் ஸ்பரிசத்தை முதன் முதலாக உணர்ந்தாள் மலர்கொடி. "என்ன மலர் எப்போவுமே சோகமா இருக்க, உனக்கு இங்க என்ன பிரச்சினை இருந்தாலும் சொல்லும்மா" என்ற மீனாட்சியின் கேள்விக்கு கண்ணீரை மட்டுமே பதிலளித்தால் மலர்கொடி.இப்பொழுது அவளுக்கு தேவை அரவணைப்பு என்பதை உணர்ந்த மீனாட்சிமலர்கொடியின்  கண்ணீரைத் துடைத்து விட்டு மார்போடு அணைத்தாள். மெல்ல மெல்ல அவளிடம் நெருங்கி பழகி அவளிடம் மாற்றத்தை கொண்டு வர முயற்சித்தாள் மீனாட்சி, மலர்கொடிக்காகவே தினமும் இல்லத்திற்கு வர ஆரம்பித்தாள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. மலர்க்கொடியும் மெல்ல மெல்ல மாறினாள். அப்படியிருந்தும் சில நேரங்களில் அவள் சோக மயமாய் காட்சியளிப்பாள். எனினும் அவளிடம் காரணத்தைக் கேட்காமல் அவளது நம்பிக்கையைப் பெறுவதிலேயே குறியாய் இருந்தாள் மீனாட்சி.
                         தங்கள் திருமண ஆல்பத்தை மலர்கொடிக்கு காட்டுவதற்காக பீரோவில் இருந்த ஆல்பத்தை எடுத்தாள் மீனாட்சி. அப்பொழுது எதிர்பாராத விதமாக குணசுந்தரின் டைரி ஒன்று மீனாட்சியின் கண்ணுக்குப் பட்டது.  ஆவல்மேலிட்டவளாய் அதை எடுத்து வாசிக்கலானாள். இல்லத்தில்உள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் பற்றிய குறிப்புகள் நிறையஇருந்தன. தொடர்ந்து வாசித்த மீனாட்சி அதிர்ச்சியின்எல்லைக்கே போய்விட்டிருந்தாள்.
ஆம் அடுத்தடுத்த பக்கங்களில் அவள் படித்தது மலர்கொடியைப் பற்றிய குணசுந்தரின் வர்ணனை. 13 வயதுக் குழந்தையை காமக்கண் கொண்டு பார்க்கும் கொடூரனா தன் கணவன் என்று வெட்கத்தால் குறுகிப் போனாள்.  ஒருவாறுசுதாரித்துக் கொண்டு மேலும் ஏதாவது ரகசியங்கள் இருக்குமா என்று தேடிப்பார்த்தாள் அவளின் கைக்கு சிக்கியது அந்த புகைப்படம். அதில் ஆபாச நிலையில் தோற்றமளித்தாள் மலர்கொடி. மலர்கொடியின் சோகத்திற்கு காரணம் புரிந்துவிட்டது மீனாட்சிக்கு. அன்று இரவு முழுவதும் குணசுந்தரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கண்ணீரோடு ஆழ்ந்தாள் சிந்தனையில். தீர்க்கமான முடிவெடுத்தவளாய் அதிகாலையிலேயே மலர்கொடியை சந்திக்க விரைந்தாள்.    அதிகாலையில் மீனாட்சியை சற்றும் எதிர்பார்க்காத மலர்கொடி "என்ன மேடம் இவ்வளவு காலையிலேயே வந்திட்டீங்க" என ஆச்சரியம் மேலிட கேட்டாள். "உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றபடி அவளை தனியே அழைத்து சென்றாள் மீனாட்சி. "குணா உன்னை தொந்தரவு பண்றாரா?" என்ற மீனாட்சியின் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத மலர்கொடி அழத் தொடங்கினாள். அவளை வாரி அணைத்த மீனாட்சி கண்களில் வழிந்த துடைத்தபடி  "கவலைப்படாதடா நான் இருக்கேன், இன்னையோட உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்திருச்சு டா" என்றாள். மலர்கொடியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டை நோக்கி விரைந்தாள் மீனாட்சி.
                       "என்ன மீனாட்சி  காலையிலேயே எங்க போயிருந்த?" என்ற குணசுந்தரின் கேள்விக்கு பதிலளிக்காமல் நேரே தன் பெட்ரூமுக்கு சென்றாள் மீனாட்சி. கோபம் கொப்பளிக்க அவளைப் பின் தொடர்ந்த குணசுந்தர் "என்னடி நான் கேட்டுகிட்டே இருக்கன் நீ பாட்டுக்கு பதில் சொல்லாம வந்தா என்ன அர்த்தம்?" என்று கத்தினான். "இல்லத்துக்கு போயிருந்தேன்" இது மீனட்சியின் பதில்." இல்லத்துக்கா ? இவ்வளவு காலையிலேயேவா? ஏன்?" என்று சற்று வியப்புடன் கேட்டான் குணசுந்தர். "மலர்க்கொடியைப் பார்க்க போயிருந்தேன்" மீண்டும் மீனாட்சி. "மலர்கொடியையா? ஏன்?" என்றான் சற்று தாழ்ந்த குரலில்."ஏன் குரல் குறைஞ்சிருச்சி? உங்க குட்டு வெளிய வந்திருச்சான்னு பயமா?"
என்று துணிச்சலோடு கேட்டாள் மீனாட்சி. இதை சற்றும் எதிர்பார்க்காத குணசுந்தர் "என்ன உளர்ற" என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாய் கேட்டான். குணசுந்தரின் டைரி, புகைப்படங்கள் அனைத்தையும் அவன் முன்னே வீசிய மீனாட்சி "இதுக்கு என்னங்க அர்த்தம்" என்று கோபக்கனல் வீசினாள். " ஓ தெரிஞ்சிருச்சா" என்ற குணசுந்தர் தன் கோட்டை மாட்டியபடி "இந்த விசயத்துல நீ தலையிடாத மீனாட்சி. என்ன மாதிரி பெரிய மனுஷங்க எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பாங்க. ஆனா உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கேனா? உன்ன ராணி மாதிரி இல்ல தாங்குறேன் அதனால இந்த விசயத்த இதோடு விட்டுடு" என்றான். "அதுக்காக ஒரு பிஞ்சு குழந்தையோட வாழ்க்கையை கெடுப்பிங்க, நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா?" என்று பொங்கினாள் மீனாட்சி. "உன்னால முடிஞ்சதப் பார்த்துக்க, எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க நான் தயார். உன்னால இதெல்லாம் சகிச்சிக்கிட்டு இருக்க முடியலனா தாராளமா உன் வீட்டுக்கு போகலாம்" என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். "அவன் செல்லும் வரை வாசலையே வெறிக்க பார்த்தவள், படுக்கையில் விழுந்து அழத்தொடங்கினாள். தனது ஆற்றாமையை கண்ணீராய் வெளியேற்றிய பின் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானாள். தன் தாய் வீட்டிற்கு செல்ல மனமில்லாததால் குணசுந்தருக்கு மதிய உணவு தயாரிக்க சென்றாள்.
                            மதியம் வழக்கம்போல் வீட்டிற்கு வந்த குணசுந்தருக்கு மீனாட்சியே உணவைப் பரிமாறினாள். வெகு நேரம் அழுததால் அவளது கண்கள் வீங்கியிருந்ததை குணசுந்தர் கவனிக்க தவறவில்லை. "என்ன  மீனாட்சி என்னமுடிவெடுத்திருக்க?" என்றான்மனசுக்குள் சற்று சிரித்தபடி. "எங்க வீட்டுக்கு போக எனக்கு இஷ்டம் இல்லை?" என்று கண்களைத் தொட்ட கண்ணீரை துடைத்தபடி பதிலளித்தாள் மீனாட்சி. "வெரி குட், குட் டிசிஷன்" என்ற படி உணவை சுவைக்கலானான் குணசுந்தர். வழக்கமாய் மதிய உணவிற்குபின் குட்டி தூக்கம் போடுவது குணசுந்தரின் வழக்கம். அன்றும் வழக்கம் போல் மதிய உணவிற்குப் பின் தன் அறையை நோக்கி நடந்தான். சற்று தலை சுற்றுவது போல் உணர்ந்தவன் அடிசரிந்த மரம் போல் விழுந்தான். குழப்பத்தோடு மீனாட்சியைப் பார்த்தான் குணசுந்தர். "என்னடா  பாக்குற, உன்ன மாதிரி கொடூரன் இந்த உலகத்துல இருக்குறதுக்கு தகுதியே இல்ல. அதனால உன் சாப்பாட்டுல விசத்தை கலந்துட்டேன்" என்ற போது காளியாய் மாறியிருந்தாள் மீனாட்சி. மீனாட்சியின் குரல் தான் குணசுந்தர் கேட்ட கடைசிக் குரலாய் அமைந்தது. ஆம் மீனாட்சியின் ருத்ரதாண்டவத்தைக் பார்த்த படியே குணசுந்தரின் ஆவி பிரிந்தது.
                         அடுத்த ஒரு மணி நேரத்தில் போலீஸ் உறவினர்கள் என்று அந்த தெருவே மனித தலைகளால் நிரம்பி வழிந்தது. தன் கணவனையே கொன்ற மீனாட்சியை உறவினர்கள் பலரும் பலவாறு பலித்துக் கூறினார்கள். எதையும் பொருட்படுத்தாமல் போலீசுடன் நடக்கலானாள். மனதை மட்டும் கல்லாக மாற்றியிருந்ததாள் கண்கள் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தன. போலீஸ் காவலில் இருந்த அவளிடம் அவளது பெற்றோர், தோழிகள் உறவினர்கள் என அனைவரும் காரணத்தைக் கேட்டனர். யாருக்கும் பதில் சொல்லாத மீனாட்சி கலங்கிய கண்களோடு இருந்தாள்.
                        கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்தாள் மீனாட்சி. "உன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுக்கிறாயா?" என்ற நீதிபதியின் கேள்வியால் மௌனம் கலைத்தாள் மீனாட்சி. "ஐயா என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் உண்மையே. ஆம் என் கணவரை கொலை செய்தது நான் தான். ஆனால் எனக்கு அது குற்றமாய் தெரியவில்லை. காரணம் நான் கொன்றது மனிதனை அல்ல மனித வடிவில் உலாவிய மிருகத்தை. ஒன்றும் அறியாத ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கையில் காமக் களியாட்டம் நடத்திய மிருகம். தட்டி கேட்ட என்னை தாய் வீட்டுக்கு செல்ல சொன்னான். அவனுக்கு தண்டனை கொடுக்காமல் முடங்கிக் கிடக்க எனக்கு மனமில்லை. அவனைப் பற்றிய உண்மைகளை வெளியே சொன்னால், தன் செல்வாக்கை பயன்படுத்தி அனைத்தையும் தனக்கு சாதகமாக்கி கொள்வான். எனவே தான் என் கையாலேயே அவனைக் கொன்றேன்.அது மட்டும் இல்லாமல் பல குழந்தைகள் இதைப்போல் காமக் கொடுரர்களின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர், அவர்களின் பெற்றோருக்கு கூட தங்கள் பிள்ளைகள் அனுபவிக்கும் நரக வலி தெரிவதில்லை. அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இத்தனை துணிச்சலாக இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று தீர்க்கமாக பேசினாள். "அப்படி உங்கள் கணவர் எந்த குழந்தையைக் கெடுத்தார்" என்று நீதிபதி கேட்டார்."அந்தகுழந்தையின் பெயரை இந்த இடத்தில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. காரணம், இதில் அந்த பிஞ்சிக் குழந்தையின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது  நீங்கள் விருப்பப்பட்டால் அதற்கான ஆதாரங்களோடு உங்களிடம் தனியாக விளக்க தயாராக உள்ளேன்". என்றாள்  மீனாட்சி. அவளது வாதத்தில்உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிபதி அதற்கு சம்மதித்தார்.

இதற்கிடையில் ஜாமீனில் வெளியே வந்த மீனாட்சி நேராக இல்லத்திற்கு சென்று அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் இல்லத்திற்கு உடனடியாக வருமாறு அழைப்பு விடுத்தாள். பலரும் அவள் அழைப்பை புறக்கணித்த நிலையில் முக்கிய நிர்வாகியான அறிவானந்தமும் அவருடன் கோபாலகிருஷ்ணனும் வந்திருந்தனர். அவர்களிடம் நடந்த உண்மையை விளக்கிய மீனாட்சி, மலர்கொடியை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாள். அனைத்தையும் கேட்ட அறிவானந்தம் "அது குறித்து தாங்கள் மட்டும் முடிவெடுக்க முடியாது, நிர்வாகக் குழுவைக் கூட்டித்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரை நீங்கள் இந்த இல்லத்திலேயே தங்கிக்கொள்ளுங்கள் என்றனர். அது சரியென்று படவே மீனாட்சியும் அதற்கு சம்மதித்தாள்.

"மீனாட்சியக்கா" என்ற  மலர்கொடியின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் மீனாட்சி. மலர்கொடியின் பிஞ்சு முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே மீனாட்சியின் கண்கள் கண்ணீரை வார்த்தது. மலர்க்கொடி அறியா வண்ணம் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு திரும்பிய மீனாட்சியின் கன்னத்தில் இருந்த ஈரத்தை பார்த்த மலர்க்கொடி “என்னால தானே உங்களுக்கு இவ்வளவு பிரச்சினையும் அக்கா” என்று சொல்லிமுடிப்பதற்குள் அவளது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“நல்ல உள்ளங்கள்”  அறக்கட்டளையின் தலைவர்  குணசுந்தர் இறந்த பிறகு முதன்முறையாக கூடியிருந்தது அதன் நிர்வாகிகள் கூட்டம். அறக்கட்டளையின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் முக்கிய கூட்டம் என்பதால் அனைவரும் ஆஜராகியிருந்தனர். கொலை செய்யப்பட்டு இறந்த குணசுந்தருக்கு சிறு மௌன அஞ்சலி கூட இல்லாமல் தொடங்கியது கூட்டம். செயலாளர் பொறுப்பில் இருக்கும் அறிவானந்தம் பேச்சை ஆரம்பித்தார். "உங்க எல்லாருக்கும் நாம கூடியிருப்பதற்கான காரணம் தெரியும், இத்தனை நாள் நல்ல மனிதன்னு நாமெல்லாம் நினைச்ச குணசுந்தரோட மரணம்  நமக்கும்  நம் அறக்கட்டளைக்கும் நிறைய  பாடங்கள் தந்திருக்கு. இதே மாதிரி தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பது நம் கடமை." என்று சொல்லி முடிக்க அனைவரும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையாட்டினர். "அது மட்டுமில்லாமல் மீனாட்சி இந்த வழக்கில் இருந்து விடுபட நம்மால் ஆன எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்" என்று தன் கருத்தை தெரிவித்தார் பொருளாளர் கோபாலகிருஷ்ணன். "அதே போல் இந்த அறக்கட்டளயின் அடுத்த தலைவராக மீனாட்சியை நியமித்து அந்த பதவியை கௌரவிக்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். தங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று தனது உரையை முடித்தார் அறிவானந்தம். சிறிது நேர சலசலப்பிற்கு பின் அனைவரும் ஒரத்த குரலில் சம்மதம் தெரிவித்தனர்.

குற்றவாளிக் கூண்டில் மீனாட்சி நிற்க, தீர்ப்பை எதிர்பார்த்து மீனாட்சியின் பெற்றோரும் அறக்கட்டளை நிர்வாகிகளான அறிவானந்தம், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் நீதிபதி “மீனாட்சி அளித்த ரகசிய வாக்குமூலத்தை இந்த கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஒரு பிஞ்சு குழந்தையின் நலன் கருதி அந்த வாக்குமூலம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தவறு செய்த தன் கணவனையும் கண்டித்து மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த துணிந்த இந்த மீனாட்சியின் துணிச்சல் பிரமிப்பாக இருக்கிறது. மேலும் மீனாட்சி தன் கணவர் குணசுந்தரை கொலை செய்வதற்கு வேறு எந்த வலுவான காரணங்களும் இல்லை. மீனாட்சி செய்த இந்தக் கொலையில் சுயநலமில்லை என்றாலும், கொலைக்கான தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனாலும் “நல்ல உள்ளங்கள்” அறக்கட்டளை இல்லத்தில் வாழும் குழந்தைகளின் நலன் கருதி, மீனாட்சியின் நல்ல உள்ளத்தை மனதில் கொண்டும் குறைந்தபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறைவைக்க உத்தரவிடுகிறேன். இந்த சிறைதண்டனையையும் மீனாட்சி நல்ல உள்ளங்கள் அறக்கட்டளை இல்லத்தில் கழிக்க வேண்டும். ஏதோ ஒரு பிஞ்சுக் குழந்தையின் நல்வாழ்வுக்காக தன் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் இந்த பெண் உண்மையிலேயே எனக்கு அந்த மதுரை மீனாட்சியாக தெரிகிறாள்.” என்று தீர்ப்பை முடித்தார் நீதிபதி. 

மீனாட்சியின் பெற்றோருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியாய் இருந்தாலும் சற்று ஆறுதலாகவும் இருந்தது. ஆனால் மீனாட்சியோ தன் கடமையை செய்ய இனி தடையேதும் இல்லாததால் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவள் கண்களில் மலர்கொடியின் சிரித்த முகம்
பூத்துக்கொண்டே இருந்தது.
                   
                                              --அசுரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கத்தாலி

அறிந்த கதை