நந்தினி

“தட தட” வென தொடர்வண்டி சத்தம் அப்போதுதான் நந்தினியின் செவிகளைத் தாண்டி மூளைக்கு எட்டியது. உறக்கம் கலைந்தவள் சூரிய வெளிச்சம் எட்டிப்பார்ப்பதை உணர்ந்து அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தால், மணி 7.05 என்று காட்டியது. தன் மேலே இருந்த போர்வையை விலக்கிவிட்டு சோம்பல் முறிக்க முயற்சித்தவளுக்கு தடையாய் தொடர்வண்டியின் மேற்கூரை தட்டியது. சற்று கீழே எட்டிப்பார்த்தாள். அவள் தந்தை மாடசாமி அன்னை முத்தம்மாளுடன் சன்னோரத்தில் நகரும் வயல்வெளியைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். தூரத்தில் எங்கோ “பருத்திப்பால் பருத்திப்பால்.... சூடான பருத்திப்பால்” என்ற சத்தம் கேட்டது. அந்தக் குரல் தன்னுடைய படுக்கைக்கு அருகே வருவதை உணர்ந்த நந்தினி “அப்பா இன்னும் எவ்ளோ நேரம் இருக்குப்பா திருநெல்வேலி போய்ச் சேர?”என்று ஆவலோடு கேட்டாள்.  “இன்னும் அரைமணி நேரத்தில் போய்டலாம்மா. நீ தேநீர் எதுவும் குடிக்கிறாயா?” என்று மாடசாமி கேட்க உடனே “பருத்திப்பால் சாப்டுறேன்பா” என்று புன்னகையோடு பதிலளித்தாள். மாடசாமியும் சிரித்துக் கொண்டே “சரி கீழ இறங்கி வா” என்றார்.

                   பழங்கதைகள் பேசிக் கொண்டே பருத்திப்பால் குடித்து முடித்த பத்தாவது நிமிடத்தில் தொடர்வண்டி “திருநெல்வேலி சந்திப்பு” என்ற பெயர்ப்பலகையை எட்டியிருந்தது. அந்த நெல்லை மண்ணை தீண்டிய காற்றினை சுவாசித்த நொடியில்  உடலின் வனப்பு 25 வயதைக் காட்டினாலும் மனதில் 5 வயது சிறுமியைப் போல் துள்ளிக்கொண்டிருந்தாள் நந்தினி. பெட்டிகளை எடுத்துக் கொண்டு தொடர்வண்டி நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர்களை உற்சாகமாக வரவேற்றனர் “தானியங்கி ஓட்டுநர்கள்”. “ எங்க போகணும் மா??? எங்க போகனும் ஐயா??” என்று ஒருவரை மாற்றி ஒருவர் கேட்டுக்கொண்டிருக்க, “இல்லை வேண்டாம்” என்ற பதிலோடு அவர்களைக் கடந்து சாலையில் நடக்கத் தொடங்கினர். அந்த சாலையில் அந்த காலைப் பொழுதில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவை சிற்றுண்டி கடையும், செய்தித்தாள் கடையும். மற்ற கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கடந்து மூன்று சாலைகள் சந்திக்கும் முச்சந்திக்கு வந்தனர். எதிரே இருந்த சிறிய பாதை நகர்ப்புற பேருந்து நிலையத்திற்கு வாயிலாய் இருந்தது.  வலதுபுற சாலையில் ஒரு கடையைக் காட்டி “ நந்தினி, இருட்டுக்கடைக்கு அப்புறம் அல்வாவுக்கு பிரபலமான கடை இதுதான்மா” என்று கைகாட்டினார். அந்தக் கடை பூட்டியிருந்தது. கடைக்கு மேலே வெள்ளைநிறப் பலகையில் நீல வண்ணத்தில் “சாந்தி ஸ்வீட்ஸ்” என்று எழுதியிருந்தது. இடதுபுற சாலை பழைய பேருந்து நிலையத்திற்கு இட்டுச்சென்றது. அவர்களுக்கும் அங்குதான் செல்ல வேண்டியிருந்ததால் இடதுபுற சாலையில் நடக்க ஆரம்பித்தனர். இருநூறு அடிகளுக்குள்ளாகவே தகரத்தில் மேற்கூரை வேய்ந்த அந்தப் பேருந்து நிலையம் வந்தது. “தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம், சுரண்டை, கடையம்” உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அங்குதான் வரும். இவர்கள் பேருந்து நிலையத்தை அடைந்த அடுத்த 5வது நிமிடத்தில், “சரண்டை, வழி: ஆலங்குளம்” என்ற பலகை தாங்கிய விரைவுப் பேருந்து வந்தது. “இந்தப் பேருந்துதான் ஏறுங்க” என்று மாடசாமி குரல் கொடுக்க முத்தம்மாளும், நந்தினியும் முதலில் ஏற, பின்னாடியே மாடசாமியும் ஏறினார். உட்காருவதற்கு இடம் பிடிக்க அங்கும் இங்கும் சிலர் அலைந்து கொண்டிருக்க சற்று கூச்சலோடு பரபரப்பாக இருந்தது பேருந்து. அப்போது விவசாயி ஒருவர், ஒரு சோள மூட்டையை பேருந்துக்குள் ஏற்ற கடுப்பான நடத்துநர் “யோவ் மூட்டைலாம் ஏத்த முடியாது நகரப்பேருந்து வரும் அதில ஏத்திக்க,  இப்போ கீழ இறக்கு” எனக் கத்த “என்னயா சும்மா கத்துற ‘பாரம்’ ஏற்றுவதற்கான தொகை எவ்வளவோ அதுக்கு சீட்டு கொடு நான் காசு கொடுக்கிறேன்.” என்று எதிர்வாதம் செய்ய, இன்னும் பரபரப்பு கூடியது. ஒருவழியாக சமாதானம் ஆகி நடத்துநர் பயணச்சீட்டை கொடுக்க ஆரம்பிப்பதற்கும் பேருந்து கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து இரட்டைப் பாலத்தைக் கடந்து, நெல்லையப்பர் கோவிலை அடைவதற்குள் நந்தினியின் நினைவுகள் பள்ளிப்பருவத்திற்கு சென்றுவிட்டது. ஆலங்குளத்திற்கு அவள் அப்பா 3  பயணச்சீட்ட வாங்கியது கூட உணராமல் சன்னலோர காட்சிகளில் தன் கடந்த காலத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். 

               “ பாவாடை சட்டையோடு பள்ளிக்குச் சென்றது, தோழர்களுடன் விளையாடிய விளையாட்டுக்கள், மாமா வயலில் இருந்த கிணற்றில் அப்பாவுடன் நீச்சல் பழகியது” என்று அந்தப் பசுமையான நினைவுகள் அவள் மனதை நிறைத்திருந்தன. கோவில் திருவிழாவில் நடக்கும் கலைநிகழ்ச்சிகள், சாமியாட்டம், ராட்டினம் என்று ரசிப்பதற்கு எத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது இந்தக் கிராமங்களில் என்று அவள் எண்ணி முடிக்கையில், அதுபோன்ற ஒரு திருவிழாவில் நடந்த கோரமான சாதிச் சண்டையும், உயிர்பலிகளும் நினைத்த மாத்திரத்தில் அவள் தொண்டையை அழுத்தியது. அந்தக் கலவரத்திற்குப் பிறகுதான் ஊரில் இருக்கப் பிடிக்காமல் தன் ஒரேமகளுக்கு அமைதியான, அன்பான வாழ்வை கொடுக்க எண்ணி சென்னைக்குக் குடிபெயர்ந்தார் ஆசிரியரான மாடசாமி. அதற்குப் பிறகு மூன்று முறை திருவிழாவிற்காக மாடசாமியும், முத்தம்மாளும் வந்த போதும் கூட படிப்பு, பிறகு பனிச்சுமை காரணமாக நந்தினியால் வரமுடியவில்லை. 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தான்பிறந்த ஊருக்கு மீண்டும் வருகிறாள் நந்தினி, அதுவும் தன்குல தெய்வமான “எமதர்ம ராசா சாமி” கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு. ஆம்! இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த தீ விபத்தில் கோவில் கட்டிடம் பாதிக்கப்பட்டதால் அதனைப் புனரமைத்து நிதி வசூலித்து கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். அதற்குத்தான் அத்தனை ஆவலோடு வந்து கொண்டிருக்கிறாள் நந்தினி. 

                      அவளின் நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கையில் பேருந்து ஆலங்குளத்தை எட்டியிருந்தது. ஆலங்குளத்தில் இறங்கி தானியங்கி வாகனத்தில் அருகேயுள்ள குருவங்கோட்டை கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். சாலை நடுக பச்சைப் பசேலென காட்சியளிக்கும் வயல்வெளிகளுக்கு நடுவே, சில கட்டடங்களும் புதிதாய் முளைத்திருந்தன. ஊருக்கு அருகே இருந்த வயல்வெளிகளெல்லாம் குடியிருப்புகளாய் மாறியிருந்தன. ஊரை நெருங்க நெருங்க சாலையெங்கிலும் அலங்கார விளக்குகளும், ஒலிப்பெருக்கிகளும் அதில் பக்தி பாடல்களுமாய் திருவிழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது அந்த கிராமம்.  ஊரின் முகப்பிலேயே வண்ண துணிகளில் பந்தலிட்டு விடலைப் பசங்களும் சில பெரிய மனிதர்களும் திருவிழாவிற்கான ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்தார்கள். பிரம்மாண்ட கோபுரம் ஓலைக்கீற்றுக்களால் மறைக்கப்பட்டிருந்தன. கோபுரத்தின் உச்சிக்கு செல்வதற்கு சாளரங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன. காரை வீடுகள் எல்லாம் பளிங்குக் கற்களால் பளிச்சிட்டன. அதிகமான மச்சி வீடுகளும் அவற்றில் பெரும்பாலானவை பளிங்குக் கற்களாலும் அழகாய்க் கட்டப்பட்டிருந்தன.  அவற்றை ரசித்தபடியே இருந்த நந்தினி “இப்படி ஓரமா நிப்பாட்டுப்பா” என்ற அப்பாவின் குரல்கேட்டு திரும்பியவளின் எதிரே அவளின் பெரியம்மா நின்று கொண்டிருந்தாள். தானியங்கி ஓட்டுநருக்கு பணத்தை கொடுத்துவிட்டு பெட்டியை இறக்கிய முத்தம்மாளிடம் மொத்தமாக “வாங்க, எப்படி இருக்கீக? பயணம் எல்லாம் பரவால்லயா?” என்று தன் வட்டார மொழி வழக்கில் நலம் விசாரித்தாள். மாடசாமியின் அண்ணன் மனைவி அன்னம்மாள். 

மாடசாமிக்கு ஒரே அண்ணன் முத்துராசா. அப்பா பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட தாய் வள்ளியம்மாள் அண்ணனின் பராமரிப்பில் இருக்கிறார். அண்ணனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். இன்னொருவன் முத்துராசாவுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறான். வழக்கமான நலம் விசாரிப்புகள், உறவினர் வீடுகளுக்கு செல்வது என்று உற்சாகமாக பொழுது கழிந்தது நந்தனிக்கு. ஆனால் கோவிலுக்கு மட்டும் செல்ல முடியவில்லை, “நாளைக்கு முழுநேரமும் அங்கதான் இருக்கனும் கவலப்படாதே” என்று அம்மா சமாதானம் சொன்னாள். கூம்பின் நுனியை வெட்டிய உருவத்தில், ஆக்ரோசமான சாமிகளின் உருவங்களை வரைந்து மாலையிட்டு வழிபடும் அந்தப் பண்பாட்டை மீண்டும் ரசிக்கும் ஆவலோடு கண்மூடினாள் அதிகாலையில் சீக்கிரம் எழும்ப.

                  மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கெல்லாம் கோவிலுக்கு தன் குடும்பத்தோடு பிறப்பட்டாள் நந்தினி. கோபுர வாயிலில் மாட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் “ஹேமதர்ம ராஜா சுவாமி திருக்கோயில்” என்று எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த நந்தினி, ‘எமதர்ம ராஜா எப்போடா ஹேமதர்ம ராஜா ஆனாரு’ என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொண்டாள். கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றவளுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவள் எதிர்பார்த்து வந்த பண்பாட்டு சின்னங்கள் எதுவும் அங்கில்லை. விநாயகர், முருகன், துர்க்கை நவகிரகம், அம்மன் என அனைத்தும் கருங்கல் சிலைகளாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக கருவறையில் தங்கள் காவல் தெய்வத்தின் உருவம் வரைந்த கூம்பு வடிவ உருவத்திற்குப் பதிலாக சிவலிங்கம் ஒன்று தலையில் வெள்ளிப் பாம்புடன் காட்சியளித்தது அருகே பூணூல் போட்ட ஆசாமி ஒருத்தர் ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டு இருந்தார். அதிர்ச்சி தாங்காமல் ஆற்றாமையோடு தன் பாட்டி வள்ளியம்மாளிடம் “என்ன பாட்டி இது, இதெல்லாம் நம்ம பாரம்பரிய வழக்கம் கிடையாதே, இப்படி எல்லாத்தையும் மாத்தி வச்சிருக்காங்க” என்று கேட்க. அவளை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் “இங்க எதுவும் பேச வேண்டாம், வீட்ல போய் பேசிக்கலாம் விடு” என்றாள். ஆனாலும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! வழக்கமாக கருவறைக்குள் செல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு என்றாலும் திருவிழாக் காலங்களில் கூட்டத்தை கருத்தில் கொண்டு கருவறைக்கு முன்அறை வரைக்கும் அனைவருக்கும் அனுமதி உண்டு ஆண் பெண் பாகுபாடின்றி.  ஆனால் புதிய வழக்கமாக ஆண்கள் மட்டுமே கருவறைக்கு முன்அறையில் அனுமதிக்கப்பட்டனர், “பெண்கள் அனுமதி இல்லை” என்ற பலகை ஒன்றும் தொங்கிக்கொண்டிருந்தது. அனைத்தும் நந்தினிக்குள் ஏதோ கலவரமூட்ட ஏதோதோ யோசித்துக் கொண்டிருந்தாள். அதே யோசனையோடு வீட்டிற்குச் சென்றவள் முதல்வேளையாக தன் பாட்டியிடம் காரணத்தைக் கேட்டாள்.

                      “அத ஏன்மா கேட்குற? 5 வருடத்துக்கு முன்னாடி நிர்வாகக்குழு தலைவரா ராமராஜனைத் தேர்ந்தெடுக்குற வரை எல்லாம் சரியாகத்தான் இருந்துச்சு. அவன் வந்ததுக்கப்புறம் ஏதேதோ காரணம் சொல்லி ஒன்னொன்னா மாத்த ஆரம்பிச்சான். அவன் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான மதவாத இயக்கத்துல இருக்கிறதால யாரும் பெருசா எதிர்க்கவும் இல்லை. அவன் விருப்பம் போல ஆட்டம் போடுறான்.” என்று பெருமூச்சோடு சொல்லி முடித்தாள் பாட்டி. “ஏன் பா நீங்களாவது கேட்க கூடாதா? என்று தன் அப்பாவைக் கேட்க, “நாமே எப்போவாவது வர்றோம். நமக்கு எதுக்கும்மா வம்பு” என்று அவளை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனாலும் அந்த மாற்றங்களை ஒப்புக்கொள்ள அவள் மனம் மறுத்துவிட்டது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவள் ஆயினும், இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு என்பதை புரிந்தவள். ஆதலால் இந்த மாற்றங்களை அவளால் ஏற்க முடியவில்லை.ஆனால் இதை இப்படியே விட்டுவிட மனமின்றி தான் பணியாற்றும் வாரப் பாத்திரிக்கையில் இந்தச் செய்தியை போட முடிவெடுத்து ஊருக்கு கிளம்புவதற்கு முன்பாகவே  ஆதாரங்களைத் திரட்டினாள்.  4 நாட்களுக்குப் பிறகு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் பெற்றோரோடு சென்னைக்கு கிளம்பினாள் நந்தினி.

                      திரட்டிய ஆதாரங்களைக் கொண்டு ஒரு கட்டுரை தயார்செய்து தான் பணியாற்றும் வாரப்பத்திரிக்கையின் ஆசிரியரிடம் சமர்ப்பித்தாள்.  அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு நந்தினியை வெகுவாகப் பாராட்டிய அவர், “கட்டுரை அருமை! ஆனால் இது மதம் சம்பந்தப்பட்டது, அந்த ஆளுக்கு ஆளுங்கட்சி ஆதரவு வேற இருக்கு. அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணி தீர்வு காண்கிற அளவுக்கு இதில் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் எதுவும் இல்லை” என்று கூறி அதைப் பிரசுரிக்க மறுத்து விட்டார். அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தவளுக்கு அவளது பள்ளித் தோழன் வெற்றிமாறனின் நினைவு வந்தது. அவன் சட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு வழக்கறிஞரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனிடம் ஆலோசனை நடத்த முடிவெடுத்தாள். 

                        வழக்கமாக அவர்கள் சந்திக்கும் கன்னிமரா நூலக வளாகத்தில் சந்தித்து பேசினர். நந்தினியைப் போலவே வெற்றியும் இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பென கருதினான். அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என முடிவெடுத்தான். அதற்குப் போதுமான ஆதாரங்களை நந்தினி ஏற்கெனவே திரட்டியிருந்தாள். வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்ததுதான் தாமதம், நந்தினிக்கும், மாடசாமிக்கும் ஊரில் உள்ள முத்துராசாவுக்கும் அத்தனை மிரட்டல்கள். “அது எப்படி ஒரு பொண்ணு நம்ம கோயில் பத்தி வழக்குப் போடலாம்” என்று ஆண்களும் பெண்களும் நந்தனி மீது கோபத்தில் இருந்தனர். மிரட்டல்களும் தொடர்ந்து கொண்டிருந்தன.  இதற்கு நடுவே பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் விடயத்தில் ஊரில் உள்ள பெண்களிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. ஆனால் நந்தினி மேல் எல்லோரும் கோபத்தில் இருந்ததால், என்ன செய்வதென்று தவித்தாள் நந்தினி. அப்போது பாட்டியிடம் உதவிகேட்க முடிவுசெய்தாள். 

                      வள்ளியம்மாள் ஊரில் உள்ள வயதானவர்களில் குறிப்பிடத்தக்கவள். சற்று ஓங்கிப் பேசக் கூடியவள். அதனால் ஊரில் அனைவருக்கும் அவளிடம் பயம் கலந்த மரியாதை எப்போதும் இருக்கும். “நீ கலங்காத தங்கம். நீ காகிதத்த அனுப்பு நான் இவளுகளோட கையெழுத்த வாங்கி அனுப்புறேன்” என்று அலைபேசியில் தன் பேத்திக்கு உறுதி சொன்னாள். அடுத்த இரண்டாவது நாள் மகளிர் சுயு உதவிக் குழுக்களில் கூடியிருந்த பெண்களிடம் பேச ஆரம்பித்தாள் வள்ளியம்மாள். “ஏண்டி உங்களுக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்கா? இல்லாத வழக்கத்தை எல்லாம் ஒருத்தன் கொண்டுட்டு வர்றான் அவன தட்டிக்கேட்க திராணி இல்லாம அப்படி தட்டி கேட்டு வழக்குப் போட்ருக்க என் பேத்தியையும் திட்றீங்களாடி? ஏண்டி நம்ம கோயில்ல பூணூல் போட்டவனை ஏன் விடுறது இல்லை தெரியுமா? அவன் நம்ம பொம்பளைங்க மேல்சட்டை போடக்கூடாது, கோவிலுக்குள்ள வரக்கூடாது, செருப்பு போட்டு நடக்கக் கூடாதுனு எக்கச்சக்க வம்பு பண்ணிருக்கானுங்க. அதுக்காகத்தான் நமக்குனு கோயிலக் கட்டி நாம் பூசை பண்ணிட்டு இருக்கோம். அதுலயும் வந்து பூந்துகிட்டு நீ வரக்கூடாதுனு நம்மள சொல்றதுக்கு அவன் யாருடி? நம்ம சாமிக்கு ஆம்பள, பொம்பள பேதம் இருக்கா? சைவம், அசைவம்னு பேதம் இருக்கா? நம்ம சாமி. அத தொட்டுக் கும்பிடுறதுக்கு நமக்கு உரிமையில்லையா?” என்று நீண்ட பிரசங்கமே செய்து முடித்தாள். “ஏன் கிளவி இந்தக் கதையெல்லாம் நீ சொன்னா தானே தெரியும்? இல்லன்னா எங்களுக்கு எப்படி தெரியும்?” என்று புதிதாய் கல்யாணம் ஆன ராதா செல்லக் கோபம் காட்ட அதற்கு ஆமாம் என்பது போல் அனைவரும் அமைதியாய் இருந்தனர். “அதான் இப்போ சொல்லிட்டேன்ல டி நான் சொல்றத செய்வீகளா?” என்று உரிமையோடு கேட்டுவிட்டு நந்தினி அனுப்பிய காகித்த்தை நீட்டி கையெழுத்துப் போடச் சொன்னாள். அனைவரும் கையெழுத்திட்டுவிட்டுச் சென்றனர். சிலர் புரிதலுடன் சிலர் அங்கலாய்ப்புடன்.

                      இரண்டு வருடங்களாக இழுத்தடித்த விசாரணையின் இறுதிச் தீர்ப்பை வாசித்தார் நீதிபதி ராமானுஜர். “கோவிலின் பெயர்மாற்றம், சிலைகள் மாற்றம் உள்ளிட்டவை கோவில் நிர்வாகக்குழுவின் முடிவு. அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. அதே சமயம் அந்த முடிவுகளை பரிசீலிக்குமாறு நிர்வாகக்குழுவிற்கு பரிந்துரைக்கிறேன். கோவில் கருவறைக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விடயத்தில், அது காலங்காலமாக இருந்து வரும் பழக்கம் எனபதாலும், ஆண்களும் பெண்களும் சமூகத்தில் சமம் என்பதாலும், பெண்கள் உள்ளே நுழைய விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது. பெண்கள் அந்தக் கோவிலின் கருவறைக்குள் செல்ல முழு சுதந்திரம் உண்டு என்று தீர்ப்பளிக்கிறேன்”

                இது நந்தினிக்கு முழுமையான வெற்றி இல்லை என்றாலும், நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி. அந்த வெற்றிக் களிப்பில் மீண்டும் தன் ஊருக்கு செல்ல ஆசைப்பட்டாள் நந்தினி. நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற ஊரில் உள்ள பெண்கள் தயக்கம் காட்டியதால் அதை தானே நிறைவேற்ற முடிவெடுத்து ஊருக்குப் புறப்பட்டாள். ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாயன்று சிறப்பு பூசைகள் நடக்கும் என்பதால் கோவிலில் கூட்டமும் அதிகமாக இருக்கும். அன்று தான் ஊருக்குள் இறங்கினாள் நந்தினி. நந்தினியின் வருகை அறிந்து ஆண்களும் பெண்களுமாய் அவளைப் பார்க்க வந்தனர் சிலர் பாராட்டிச் சென்றனர். சிலர் மறைமுகமாக வசைபாடிச் சென்றனர். இதையெல்லாம் முன்னமே அறிந்திருந்தால் என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மாலையில் கோவிலுக்கு கிளம்பினாள் தன் பாட்டி வள்ளியம்மாளோடு. நந்தினி கருவறைக்குள் நுழையும் செய்தி தீயாய் பரவியதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் நிறைந்தது கோவிலில்.  தனக்கான உரிமையை போராடிப் பெற்ற பெருமித்த்தில் கருவறையின் முன் அறையில் கால்வைக்க எத்தனித்த அதே தருணத்தில் கையகல கத்தி ஒன்று அவள் வயிற்றை கண்ணிமைக்கும் நொடியில் இருமுறை கிழித்தது. “அம்மா” என்று கூட சொல்வதற்கு சக்தி இன்றி “ஆ” என்று அலறி வீழ்ந்தாள். வீழ்ந்த வேகத்தில் அவள் தலை முன்அறையின் நுழைவுப் படியில் தட்டி சரிந்தது. சுற்றியிருந்த மக்கள் சுதாரிப்பதற்குள் நந்தினியின் உயிர் பிரிந்திருந்தது.காவி வேட்டி கட்டிக்கொண்டு,  கையில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியுடன் நின்ற ஆசாமி கொக்கரித்தான் “என் மதத்தின் புனிதம் காக்க இந்த வதம்” என்று. 
தன் உரிமைக்காகப் போராடிய ஓர் உயிரை கொன்றுவிட்டு, மனிதம் மறந்த மிருகம் பேசியது புனிதத்தைப் பற்றி.  மதம் என்றுமே மனிதத்தைப் போதிப்பதில்லை. அது இந்த மனித மிருகங்களுக்கும் புரிவதில்லை!

                                      — அசுரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கத்தாலி

கலியுகக் கண்ணகி

அறிந்த கதை