காதல்
பழைய மகாபலிபுர சாலையில் காலைப் போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே ஊர்ந்தும், தவழ்ந்தும் வந்து கொண்டிருந்த அந்த தனியார் பேருந்து சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பிரபலமான தொழில்நுட்ப பூங்காவில் நின்றது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த அலங்கார நிழற்குடைகள் எல்லாம் அதுவரை வெறிச்சோடிக் கிடந்தன. பேருந்து வந்து நின்ற அடுத்த நொடியில் காலை சூரியனைக் காணும் ஆவலோடு புறாக்கள் கூட்டம் ஒன்று அந்த வெற்றிடங்களை நிரப்பி நின்றன. அழகுக்காக வைக்கப்பட்ட அலங்காரச் செடிகளை தழுவிக் கொண்டிருந்த தென்றலும், பேருந்து நின்ற திசையில் தன் கவனத்தை செலுத்தியது. அவற்றோடு சேர்த்து அங்கே பணிபுரியும் சில ஊழியர்களும் ஆவலோடு பேருந்தை நோக்க, அதே தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவராய் இறங்க ஆரம்பித்தனர். அதில்தான் இறங்கினாள், அத்தனை பேரின் ஆவலுக்கும் சொந்தக்காரியான மதிவதனி. கருத்த தேகம், களையான முகம், அடுக்கி வச்ச பல்வரிசை, இதழ்களின் புன்னகை கண்டு வெட்கப்படும் கன்னக்குழி, கழுத்தோடு பிணைந்து தன் அழகை கூட்டிக் கொண்ட மெல்லிய தங்கச்சங்கிலி, துப்பட்டா இல்லாமலே அங்கங்களை அழகாய் மறைத்த குர்தி, இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாய் காண்பவரின் விழிகளை சில நொடிகளாவது சிறை செய்யும் அவளது மைபூசிய விழிகள். இந்த தேவதையைக் காணத்தான் காத்திருந்தது அந்த ரசிகர் கூட்டம்.
ரசிகர் கூட்டத்தை வழக்கமான புன்னகையோடு கடந்து செல்கையில் அவளின் அலைபேசி மணி ஒலித்தது. தொடுதிரையில் அவளது கல்லூரித் தோழி ரோஜாவின் புகைப்படம் தெரிய, மாறாத புன்னகையோடு, அழைப்பை ஏற்கும் விதமாக அலைபேசியின் தொடுதிரையை தடவிக் கொடுத்துவிட்டு அதை காதோடு சேர்த்து பொத்தினாள். அடுத்த 5 வினாடிகளில் புன்னகை எல்லாம் காணாமல் போக, அந்த இடத்தை வந்து நிரப்பிக் கொண்டன கவலையும், கலவரமும். அவற்றோடு போட்டிபோட கண்ணீரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
பதட்டமடைந்த மதிவதனி, அலைபேசி அழைப்பைக் கூட துண்டிக்க மறந்தவளாய், அனிச்சையாய் பிரதான சாலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். திரண்டிருந்த கண்ணீர்த்துளிகளும் நகர மறுத்து பூதக்கண்ணாடியாய் அவளது காட்சிகளை பெரிதாக்கிக் காட்டிக் கொண்டிருந்தன. காட்சிகளை நினைவுப்படுத்த மறந்த மூளை அனிச்சையாய் உத்தரவுகளை பிறப்பிக்க, அதன்படி பிரதான சாலைக்கு வந்தவுடனே ஒரு மூன்று சக்கர தானியங்கியை கைகாட்டி நிறுத்தியவள் “ராயப்பேட்டை போகணும்” என்று சொல்ல, சற்றே யோசித்த தானியங்கி ஓட்டுநர் ஒரு கட்டணத்தைச் சொல்ல, சரி என்ற ஒப்புதலுக்கு தலையாட்டிக் கொண்டே வண்டியில் ஏறினாள் மதிவதனி. அந்த பரபரப்பான சாலையில், வாகனங்கள் எல்லாம் காற்று மாசையும், தூசியையும் பரப்பிக் கொண்டிருக்க அவை எதுவும் கடந்த காலத்திற்குள் சென்று கொண்டிருந்த அவள் சிந்தனை ஓட்டத்தை தடுக்க முடியவில்லை.
பெரிய கனவுகள் ஏதுமின்றி மேற்படிப்பு படிக்க செல்லும் சில பணக்கார வீட்டுப் பெண்களைப் போல்தான் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள், ஈரோட்டில் பிறந்த மதிவதனி. கல்லூரிப்பருவ கேலிகள் விளையாட்டுகள் என ஆனந்தமாய் கழிந்தன நாட்கள். இதுவரை பெற்றோரை விட்டு பிரிந்ததில்லை என்ற போதிலும் அந்தக் கவலை சிறிதும் இன்றி அவளை சமநிலைப்படுத்தியது கல்லூரி விடுதியும், அவளது புதுத் தோழிகளும். விடுதியில் கலகலப்பாய் தோன்றும் மதிவதனி வகுப்பறையில் மட்டும் யாருடனும் அதிகம் பேசாமல் கொஞ்சம் அமைதியாக இருப்பாள், குறிப்பாக மாணவர்களிடம். அவர்களிடம் ஏதும் கேட்கவோ, ஏறெடுத்துப் பேசவோ விருப்பமின்றி, இறுக்கமாகவே இருப்பாள். அவளது தோழிகளும் எத்தனையோ வற்புறுத்தியும் அவள் இந்த செய்கை மட்டும் மாறவில்லை. அவளது அத்தகைய செயல்களில் தற்காப்பு உணர்ச்சி இன்றி பயமே நிறைந்திருந்தது. ஆனால் அனைத்துமே அந்த இளவரசனை அறியும் வரைதான்.
ஆம்! இளவரசன், பயருக்கேற்றாற்போல் தன்தண்பர்களின் மனதை ஆண்டு கொண்டிருந்தான். பார்த்தவுடன் வசீகரிக்கும் புன்னகை முகமும் திடமான உடல்வாகும் கொண்ட கிராமத்து இளைஞன். கல்லூரி தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே பெரும்பாலானோர்க்கு பரிச்சயமாகி இருந்தான் இளவரசன். யாருடனும் எளிதில் பழகும் அவனது குணமும், கள்ளமில்லாப் புன்னகையும், பெண்களிடம் காட்டும் கண்ணியமும், தன்னால் இயன்ற உதவியை செய்யும் மனமும், பொறுப்புகளை விரும்பி ஏற்கும் திறமும் அவனை நோக்கி சக தோழர்களை காந்தம் போல் ஈர்த்தன.
ஆனால் மதிவதனி மட்டும் இளவரசனை சட்டை செய்யாமல் இருந்தாள். ஆனால் கல்லூரி விடுதியில் அவளது தோழிகள் இளவரசனைப் பற்றிப் பேசுவதையெல்லாம் தோழிகளின் வற்புறுத்தலால் கேட்டுக்கொண்டு இருப்பாள். ஆனாலும் தன் வகுப்புத் தோழனான அவனைக் காண வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் துளிர்க்கவில்லை அந்த நாள் வரும்வரை. ஒருநாள் மதிய பாடவேளையில் அனைவரும் தூங்கி வழிந்து கொண்டிருப்பதைக் கண்ட வேதியியல் ஆசிரியர், மேற்கொண்டு பாடம் நடத்த மனமின்றி, மானவர்களை சுறுசுறுப்பாக்க ஒவ்வொருவரும் எழுந்து அவர்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை சொல்லச் சொன்னார்.
ஒவ்வொருவராய் சொல்ல ஆரம்பித்தனர் சில நகைச்சுவை கலந்திருந்தன, சில சோக சம்பவங்களும் இருந்தன. இளவரசனின் முறை வந்தது. எழுந்து நின்றவனின் குரல் வழக்கத்திற்கு மாறாக சற்றே உடைந்திருந்தது. ஆனால் அதை யாருமே கவனிக்கவில்லை. விவரிக்க தொடங்கினான் அவன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவன் வாழ்வில் நடந்த அந்த மறக்க முடியாத துயரச் சம்பவத்தை.
ஆனி மாதம் ஊரில் உள்ள அம்மன் கோயிலில் வெகுசிறப்பாக திருவிழா நடக்கும். நான்கு நாட்கள் நடக்கும் திருவிழாவில் மூன்றாம் நாள் நடக்கும் தேரோட்டம் மிகச்சிறப்பு. ஊர் மொத்தமும் சேர்ந்து வடம்பிடிக்க தேரில் உள்ள அம்மன் சிலை உரையே சுத்தி வலம்வரும். ஊருக்கு அடுத்துள்ள சேரியில் வசிக்கும் மக்களுக்கு திருவிழாவில் பங்கேற்க மட்டுமே அனுமதி உண்டு, தேரில் கைவைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அந்த வடத்தை ஒருமுறையேனும் பிடிக்க வேண்டும் என்பது அந்த சேரி மக்களின் கனவாய் இருந்தது. அதில் தீராத மோகம் கொண்ட கருப்பன் ஒருவழியாக கூட்டத்திற்குள் ஊடுருவி, வடத்தின் மீது கைவைத்தான். அவன் தொட்டதுதான் தாமதம் சுப்ரமணியனின் ஐந்து விரல்களும் அவன் கன்னத்தில் அடுத்த கணமே பதிந்தன. அவற்றோடு சேர்ந்து கொண்டு இன்னும் சில சாதிவெறியர்களும் அவனை அடிக்க, விடயமறிந்து வந்த சேரிமக்கள் கருப்பனுக்கு ஆதரவாக குரல்கொடுக்க, அங்கே பதட்டமான சூழல் நிலவியது. அப்போது இருபிரிவனருக்கும் இடையே கடும்வாக்குவாதம் மூண்டது, அப்போது இளவரசனின் தந்தை தமிழரசன் “ திருவிழாவுக்கு செலவு செய்ய எங்க பணம் வேணும் அது தீட்டு கிடையாது, நாய் மாதிரி ஓடி ஓடி வேலை செய்ய நாங்க வேணும் அது தீட்டு கிடையாது, ஆனால் தேரை இழுத்தா மட்டும் தீட்டா?” என பேசிய நியாயமான வாதங்கள் அவர்களை இன்னும் கோபமூட்டியது. அதற்குள் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்துவிட அவர்களை சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.
ஆனாலும் உண்மையைப் பேசிய தமிழரசன் மீது தீராக்கோபத்தில் இருந்த எதிர்த்தரப்பு இளைஞர்கள், அதுவும் பட்டதாரி இளைஞர்கள் திருவிழாவின் கடைசி நாளன்று கோவிலுக்கு அருகிலேயே அவரை வெட்டிசாய்த்தது அதுவும் இளவரசனின் கண்முண்ணே. தன் கண்ணெதிரே அப்பாவின் உடலும் தலையும் துண்டானதைக் கண்டு மூர்ச்சையாகினான் இளவரசன். அதில் இருந்து அவன் மீண்டு வருவதற்கே வெகுநாட்கள் ஆகின. இதை சொல்லி முடிக்கும் போது அவன் கண்களில் மட்டுமல்ல பலரது கண்களிலும் நீர் கோர்த்திருந்தது. அப்படி நீர்கோர்த்த விழிகளோடு தான் முதன்முதலில் இளவரசனை ஏறிட்டுப் பார்த்தாள் மதிவதனி. அன்று அவள் நெஞ்சில் புதைந்த அந்த முகம் இன்று வரை மறையவில்லை.
அந்த துயர சம்பவத்தை சொல்லிமுடித்த பின் இளவரசன் கேட்ட இரண்டு கேள்விகளும் கூட இன்னும் அவள் மறக்கவில்லை. “அந்தக் கொலைகார்ர்கள் பயின்ற பள்ளியில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடலை சொல்லிக் கொடுக்கவில்லையா? இல்லை நம்மை அடிமையாய் வைத்திருக்கும் சாமியை நாம் ஏன் தொழ வேண்டும் என்ற எண்ணம் அந்தக் கருப்பனுக்கு ஏனில்லை?” என்ற அந்த இரண்டு கேள்விகளுக்கும் அன்று மொத்த வகுப்பும் வாயடைத்துதான் நின்றது. ஆனால் அந்தக் கடினமான சூழ்நிலையிலும் தன் கல்வியை விடாது பற்றிக் கொண்ட அவனது சிந்தனைத் தெளிவு மதிவதனியை இன்னும் கவர்ந்தது.
அன்று முதல் இளவரசனை மீதான மதிவதனியின் பார்வையும் மாறியது. பாடங்களில் ஏதேனும் சந்தேகம் என்றாலும் தயங்காமல் இளவரசனிடம் கேட்டுக் கொள்வாள். இப்படியே மெல்ல மெல்ல பழக ஆரம்பித்தாள் இளவரசனிடம். அவனது கண்ணியமும் பெண்களிடம் அவன் காட்டும் ஒழுக்கமும், அவனது தோழர்களைப் பற்றியும் நல்ல எண்ணத்தை மதிவதனியின் மனதில் விதைக்க, முதலாம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே எல்லோரிடமும் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டாள் மதிவதனி. ஆனால் இளவரசனிடம் கொண்டிருந்த நட்பு மட்டும் ஆழமாக இருந்தது. ஒளிவுமறைவு ஏதுமின்றி, உரிமையோடு பேசிக்கொள்ளும் இனிய நட்பாக அவர்களது உறவு வேர்விட்டு வளர்ந்திருந்தது. இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் ரோஜா, சங்கர், அப்துல், சத்யாவுக்கு இவர்களின் நட்பு புரிந்தாலும், வகுப்பில் உள்ள சகமாணவர்கள் அவர்களின் நட்பை காதலாக எழுதிக்கொண்டனர் தங்கள் எண்ணமென்னும் ஏட்டில். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாது தங்களது நட்பை தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் மதிவதனியின் மனதில் காதல் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.
காரணங்களை ஆராய்ந்து, சூழ்நிலைகளை சீராய்வு செய்து, விளைவுகளைப் பற்றி சிந்தித்து, நன்மை தீமைகளை பகுப்பாய்ந்து வருவதில்லையே காதல். அதனால் தான் மதிவதனியின் காதல் மலர் மொட்டு வைத்தது எப்போது என்று அவளுக்கே தெரியவில்லை. மூன்றாம் ஆண்டு முடிவதற்குள் அவளை அறியாமல் அவள்மனதில் ஓர் மலர்ப்பந்தல் இட்டு வைத்திருந்தது அவளது காதல். ஆனால் அதை இளவரசனிடம் சொல்வதற்கு அவள்மனம் ஏனோ தயங்கியது. அவன் மறுத்துவிடுவானோ என்ற அச்சம்தான் அவளது தயக்கத்திற்கு காரணம். ஆனாலும் சில நாட்களாக மதிவதனியின் பேச்சு மற்றும் பழகும் விதத்தில் ஏற்பட்ட மாறுதல் இளவரசனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதை மதிவதனியிடமே கேட்டுவிடும் முடிவில் இருந்தான் அவன். ஆனால் அதற்கு முன்பாகவே மதிவதனியின் போக்கில் மாற்றத்தை உணர்ந்த ரோஜா அவளிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் இளவரசன் மீதான தன்காதலை தெரியப்படுத்தினாள். நமட்டுச் சிரிப்பு சிரித்த ரோஜா “தெரியும்டி கொஞ்ச நாளாவே அவன்கிட்ட கொழஞ்சி கொழஞ்சி பேசும்போதே நினைச்சேன் இப்படி ஒருநாள் சொல்வன்னு. பரவால்லடி இளவரசன் உனக்கேத்த ஜோடிதான்” என்று சொல்லி கையைக் குலுக்கி கட்டி அணைத்தாள். “அவன்கிட்ட எப்போ சொல்லப்போற??” என்ற ரோஜாவின் கேள்விக்கு அருகில் இருந்த தலையணையை மடியில் ஒரு துணையாய் வைத்துக்கொண்டு அதை லேசாக பிய்த்துக் கொண்டே “அதுக்கு தாண்டி தைரியமே வரமாட்டங்குது” என்றாள் அவளுக்கே உரிய சிறிய வெட்கத்துடன். அதற்கான தன் யோசனையையும் தெரிவிக்க மகிழ்ச்சியோடு துள்ளினாள் மதிவதனி.
இரண்டு நாட்கள் கழித்து நண்பர்கள் திட்டமிட்ட படியே எல்லோரும் சேர்ந்து அருகில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர். அவரவர் விருப்பப்படி சில புத்தகங்களை வாங்கினர். சிறிது நேரம் கழித்து சற்று இளைப்பாற சிற்றுண்டி வாங்கி சாப்பிடும் எண்ணத்தோடு கடையை நோக்கி நடக்கையில் ரோஜாவின் திட்டப்படி மதிவதனி மற்றும் இளவரசனை தனியாக விட்டுவிட்டு மற்ற நால்வரும் சிற்றுண்டி வாங்க சென்றனர். மெதுவாக நடந்து கொண்டே சட்டென பேச்சைத் துவக்கினான் இளவரசன் “ இப்போலாம் உன் பேச்சுல சில மாற்றம் இருக்கு, நீ ஏன் முன்ன மாதிரி இப்போ ஒழுங்கா பேசுறதில்லை?” என்றான். இதை சற்றும் எதிர்பார்க்காத மதிவதனி “உன் மேல இருந்த காதல் எனக்குப் புரியிற வரைக்கும் நானும் சகஜமாத்தான் பேசிட்டு இருந்தேன். ஆனால் இப்போ என்னால முடியலடா. ஆமாம் நான் உன்னை காதலிக்கிறேன்” என்றவாறே தன் கையில் அவனுக்கென்று வாங்கிய பெரியார் நூலொன்றை அன்பளிப்பாக அளித்தாள். இதை ஏற்கெனவே யூகித்திருந்த இளவரசன் “காதலுக்கு இனம், மதம், மொழி, சாதி, வயது, பாலினம் கூட தடை இல்லை என்பது உண்மைதான் என்ற போதும், நம் சமூகத்தில் புரையோடியிருக்கும் சாதிவெறியால் எத்தனை காதலர்கள் தங்கள் உயிரை விட்டுள்ளார்கள் என்பது நீ அறிந்ததே. உன் காதலை மனதார ஏற்று உனக்கென ஓர் நல்வாழ்வை வருங்காலத்தில் கொடுக்க என்னால் முடியும் என்ற போதிலும் இப்போது உன் காதலை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த சாதிவெறியர்களுக்குப் பயந்து நான் தயங்கவில்லை, ஆனால் உன் உறுதியையும் என் திறமையையும் இந்த உலகம் அறிய விரும்புகிறேன். அதுவரை நட்பென்னும் கண்ணாடியில் நம்மை நாம் பார்த்துக்கொள்ளலாமா?” என்று அவளிடமே சம்மதம் கேட்டான். என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே சரியென்பது போல் அனிச்சையாகத் தலையாட்டினாள். அப்போது அவள் இடது கண்ணின் ஓரம் வழிந்த ஒற்றைக் கண்ணீர்த் துளியை தன் ஒற்றை விரலால் துடைத்துவிட்டு “இதோ உனக்காக நான் வாங்கிய பரிசு” என்று ஒரு புத்தகத்தை நீட்டினான். அதை வாங்கியவுடன் அவளது விழிகள் ஆவலாய் வாசித்தது “பெண் ஏன் அடிமையானாள்??” என்ற தலைப்பை.
கல்லூரிப் படிப்பின் கடைசி வருடத்திலும் மதிவதனி ஓர்நொடி கூட அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தவில்லை. அதற்குக் காரணம் இளவரசன் மேல் அவள் கொண்ட நம்பிக்கை. இதோ கல்லூரிப் படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சத்யா மேற்படிப்பு படிக்க, மதிவதனி, ரோஜா, சங்கர், அப்துல் ஆகியோருக்கு சென்னையில் வேலை கிடைக்க, பெங்களூருவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு உயர்ந்திருந்தான் இளவரசன். அலைபேசியில் அடிக்கடி நண்பர்களோடு அளவளாவி, சமயம் கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து நட்பை தொடர்ந்து கொண்டிருந்தான் இளவரசன். அலைபேசி உரையாடல் மட்டுமல்லாது மாதத்திற்கு ஒருமுறையாவது நண்பர்கள் சந்தித்துக் கொள்வார்கள் என்பதால் மதிவதனி இளவரசன் எப்போதும் தன் அருகில் இருப்பது போலவே உணர்ந்தாள். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக பணி நிமித்தமாக இளவரசன் அமெரிக்கா சென்றிருந்த போதுதான் அவளது காதலை இன்னும் அதிகமாக நேசித்தாள். இப்போதும் அலைபேசி உரையாடல் உண்டு என்ற போதிலும் அது முன்பு போல் இல்லை, அந்த நாட்டின் நேர வேறுபாடு காரணமாக. இதோ பணி முடித்து மீண்டும் நேற்றுதான் பெங்களூரு வந்தான். அவனை வரவேற்பதற்கு பெங்களூரு விமான நிலையம் வரட்டுமா என்ற நண்பர்களின் கேள்விக்கு “வேண்டாம் டா, நடுராத்திரியில விமானம் வரும், எல்லாம் முடிஞ்சி வெளிய வர காலை 3 மணி ஆயிடும், உங்களுக்கு வீண் அலைச்சல் வேண்டாம் அலுவலக நண்பர் ஒருத்தர் சென்னைக்கார்ர் அவர் கூட அவரோட மகிழ்வுந்திலேயே சென்னை வந்துடுறேன்” என்று கண்டிப்போடு சொல்ல நண்பர்களும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
இளவரசனைக் காணும் ஆவல் மோலோங்க அவன் சென்னை வரும் அன்று விடுப்பு எடுக்க நினைத்தாள் மதிவதனி. ஆனால் முக்கியமான வேலை இருந்ததால் அவளுக்கு விடுப்பு கொடுக்க அவள் மேலாளர் மறுத்துவிட்டார். அரை மனதோடு அலுவலகம் வரத் தயாரானாள் மதிவதனி. இரவுத் தூக்கத்தை தொலைத்தவள் இளவரசன் வந்துவிட்டானா, பெங்களூருவில் இருந்து கிளம்பிவிட்டானா என ஒவ்வொரு தகவலையும் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டிருந்தாள். இளவரசன் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் கூட பதில் அனுப்பாமல் இருந்தாள். ஆம்! அன்று அவள் தீர்க்கமாய் முடிவெடுத்திருந்தாள், அவனோடு பேசும் முதல் வார்த்தையில் தன் காதலைச் சொல்வதென்று. மதிவதனி அலுவலகத்தில் அன்றைய முக்கிய வேலையை முடித்தவுடன் மாலை பெரியார் திடலில் இளவரசனை சந்திப்பத்து தன் காதலின் உறுதியைச் சொல்ல எண்ணியிருந்தாள். அவளுக்குத் துணையாக அவளது நண்பர்களும் அதற்கேற்றாற்போல் திட்டம் வகுத்திருந்தனர். அவன் தன் காதலை ஏற்கும் நொடியை எதிர்பார்த்து தன் ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாய் கழித்தவாறே தன் பேருந்து பயணத்தில் கனவுகளில் மிதந்தவாறே வந்து கொண்டிருந்தாள். இன்று அவளது புன்னகையின் வசீகரம் சற்று அதிகமாய் இருந்ததற்கு இளவரசனின் வருகைதான் காரணம் என்பதை அவளது விழியின் ஆவலே காட்டிக்கொடுத்தது.
ஆவல் மேலோங்கிய விழிகள் இப்போது அசைய மறுத்து அழுகையை நிறைத்திருந்தது. அவளது கடந்த கால நினைவுகள் முடியும் தருணத்தில் “ராயப்பேட்டை மருத்துவமனை இதாம்மா” என்ற தானியங்கி ஓட்டுநர் குரல் கேட்டு அவசரமாய் இறங்கி கையில் இருந்த காசை கணக்குப் பார்க்காமல் அவரிடம் கொடுத்துவிட்டு வேகமாய் ஓடினாள் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி. அங்கே ரோஜாவும் அப்துலும் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தனர். “என்னாச்சு ரோஜா என் இளவரசனுக்கு?” என்று அதிர்ச்சியும் ஆற்றாமையும் கலந்த குரலில் கண்ணீரோடு வினவ, “ தண்ணி லாரி ஒன்னு யூ டர்ன் எடுக்குறதுக்காக இடதுபக்கம் வந்த இவங்க வண்டிய கவனிக்காம திருப்பியிருக்கான். அதுல தான் நம்ம இளவரசனுக்கு இப்படியாயிடுச்சு” என்று கதறலோடு கண்ணீரையும் சேர்த்து கொட்டி முடித்தாள். “நான் அவனை பார்க்கணும் டி” என்று கண்ணீரோடு அவள் கெஞ்ச, அவசர சிகிச்சைக் பிரிவில் நின்றிருந்த சங்கரை அழைத்துக்கொண்டு மதிவதனியும் ரோஜாவும் அங்கு சென்றனர். அங்கே கண்ணாடிக் கதவைத் தாண்டி உடம்பெல்லாம் கட்டுக்களோடு தன் உயிரை தேக்கி வைத்துக்கொண்டு கொண்டிருந்தான் இளவரசன் எதையோ எதிர்பார்த்து. மதிவதனியின் வாடிய முகம் அந்தக் கண்ணாடிக் கதவில் தெரிந்த மறுநொடியில் கண்களைத் திறந்தான் இளவரசன். எதிரே கவலையால் கலங்கியிருந்த மதிவதனியின் மதிமுகம் கண்டு வாய்பேச வழியில்லாமல் இதயத்தில் அவளுக்காக எழுதியிருந்த காதல் கடிதத்தை விழிகளில் அவளுக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தான். அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் காதலின் ஆழத்தை அறிந்தவாறே அதற்குள் அவள் மூழ்கிக் கொண்டிருந்தாள். தன் காதல் கடிதத்தை விழிகளில் வாசித்துவிட்டு கையொப்பமாய் தன் கண்ணீர்த்துளியை இட்டுவிட்டு தன் உயிரை விட்டான் இளவரசன். அவனது உயிரின் பிரிவை அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள் அறியுமுன்னே, சரிந்து விழுந்தாள் மதிவதனி. விழுந்தவள் மீண்டும் எழவே இல்லை!
— அசுரன்
கருத்துகள்
கருத்துரையிடுக